Published : 28 Mar 2024 05:54 AM
Last Updated : 28 Mar 2024 05:54 AM
சென்னை: தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். தேர்தல் நாளில் வாக்குச்சாவடிகளில் பந்தல், குடிநீர் வசதிகள் செய்யப்படும் என்று தமிழக தலைமைதேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: தமிழகத்தில் தற்போது 3 கோடியே 6 லட்சத்து 2 ஆயிரத்து 367 ஆண்கள், 3 கோடியே 7 லட்சத்து 16 ஆயிரத்து 69 பெண்கள், 8,465 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 6 கோடியே 23 லட்சத்து 26 ஆயிரத்து 901வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர் அட்டை இல்லாவிட்டாலும், ஆணையம் தெரிவித்துள்ள 12 ஆவணங்களில் ஏதேனும்ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம்.
தமிழகத்தில் ஏற்கெனவே 68,144வாக்குச்சாவடிகள் இருந்தன. இந்தநிலையில், 1,500 வாக்காளர்களுக்கு மேல் இருந்தால் கூடுதல்வாக்குச்சாவடிகள் அமைக்க வேண்டும் என்ற உத்தரவின் அடிப்படையில், மேலும் 177 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
வெயில் காலம் என்பதால், வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு தேவையான சாமியானா பந்தல், குடிநீர் வசதிகள் செய்யப்படுகின்றன. நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டால், ஓஆர்எஸ் கரைசல்கொடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
45 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் நேரலை கண்காணிப்புக்கான (‘வெப் ஸ்ட்ரீமிங்’) கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. சில வாக்குச்சாவடிகளில் வெளியிலும் கேமராக்கள் இருக்கும்.
தபால் வாக்குக்கான 12-டி படிவத்தை 77,445 பேர் சமர்ப்பித்துள்ளனர். மாற்றுத் திறனாளிகளில் 50,676 பேர் வழங்கியுள்ளனர்.
வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை பணிக்காக 7 லட்சம்பேர் பயன்படுத்தப்பட உள்ளனர். இதில், 4 லட்சம் பேருக்கான முதல்கட்ட பயிற்சி முடிந்துள்ளது. அடுத்தகட்ட பயிற்சியை ஏப்ரல் 7-ம்தேதிக்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிறைவாக ஏப்ரல் 18-ம் தேதியும் பயிற்சி அளிக்கப்படும்.
மேலும் 39 பொது பார்வையாளர்கள், 20 காவல் துறை பார்வையாளர்கள், 58 செலவின பார்வையாளர்களை தேர்தல் ஆணையம்நியமித்துள்ளது. மத்திய அரசு மற்றும் வங்கி பணியில் உள்ள 7,851 பேர் நுண் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு பணிக்காக 190 கம்பெனி துணை ராணுவ படையினர் ஒதுக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 25 கம்பெனி வீரர்கள் வந்துள்ளனர்.
கடந்த 27-ம் தேதி காலை 9 மணி வரை, ரூ.36.31 கோடி பணம்,ரூ.37.19 கோடி தங்கம் போன்ற விலை உயர்ந்த உலோகங்கள், ரூ.1.89 கோடி மதுபானங்கள், ரூ.85 லட்சம் பரிசு பொருட்கள், ரூ.53 லட்சம் கஞ்சா, புகையிலை போன்ற போதைப் பொருட்கள் என ரூ.77.17 கோடி மதிப்பில் பணம், பொருட்களை பறக்கும் படையினர், நிலை கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்துள்ளனர். ரூ.7.93 கோடி தொகை குறித்து வருமான வரித் துறை விசாரித்து வருகிறது.
இதுவரை சி-விஜில் மூலம் 1,279 புகார்கள் பெறப்பட்டு, அதில் 955 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. அரசுக்கு சொந்தமான பொது சுவர்களில் இருந்த 3.16 லட்சம் அரசியல் விளம்பரங்கள், தனியாருக்கு சொந்தமான 1.16 லட்சம் இடங்களில் இருந்த விளம்பரங்கள் அகற்றப்பட்டுள்ளன.
பிரதமர் மோடி குறித்து பேசிய விவகாரத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக முதல்தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT