Published : 28 Mar 2024 06:26 AM
Last Updated : 28 Mar 2024 06:26 AM

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தமிழ்நாடு பிராமண சமாஜம் ஆதரவு

சென்னை: தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிக்க தமிழ்நாடு பிராமண சமாஜ மாநில செயற்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாஜக தலைவர் அண்ணாமலைக்கு தமிழ்நாடு பிராமண சமாஜம் அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு பிராமண சமாஜம் தமிழ்நாட்டில் வாழும் பிராமணர்களின் பிரதிநிதித்துவ அமைப்பாக பதிவு செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறது. மாநிலத்தில் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பிராமண சமூகம் கிண்டல், கேலிக்கு உள்ளாக்கப்படுகிறது. சுதந்திரப் போராட்டத்திலும், தமிழின் மறுமலர்ச்சிக்கும் இச்சமூகம் பெரும் பங்காற்றியுள்ளது. மேலும் தமிழ் மக்களின் செழுமையான பண்பாட்டுப் பாரம்பரியத்தையும், மண்ணின் தர்மத்தையும் பேணிக்காக்கும் சமூகமாகும்.

தமிழகத்தில் எங்கள் சமூகம் எதிர்கொள்ளும் பாகுபாடுகளுக்கு எதிராக நீங்கள் பேசியது வரவேற்கத்தக்கது. ஒரு தேசிய கட்சியிடமிருந்து எங்கள் சமூகத்துக்குக் கிடைத்த முதல் மற்றும் ஒரே ஆதரவு குரல் இதுவாகும். ஒரு சமூகமாக நாங்கள் கடவுள் இருப்பதை உறுதியாக நம்புகிறோம். வசுதேவகுடும்பகம் என்ற உலகளாவிய சகோதரத்துவத்தின் கொள்கைகளைப் பின்பற்றுகிறோம். நாங்கள் வலுவான மற்றும் துடிப்பான பாரதத்தை நம்புகிறோம்.

சமீபத்தில் முடிவடைந்த பிராமண சமாஜ மாநில செயற்குழுக் கூட்டத்தில் வரும் மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி, தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை முழு மனதுடன் ஆதரிப்பது என ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் நல்வாழ்த்துகள் என்று கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x