Published : 28 Mar 2024 05:39 AM
Last Updated : 28 Mar 2024 05:39 AM

போலீஸாருடன் கூட்டணி அமைத்து வீட்டை காலி செய்த வழக்கறிஞர்கள் ஆஜராக உத்தரவு

சென்னை: சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த ஜெயஸ்ரீ உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு:

எனது கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். நான்வசிக்கும் வீட்டின் உரிமை தொடர்பாக எனக்கும், எனது உறவினரான வதனி என்பவருக்கும் இடையே பிரச்சினை இருந்து வருகிறது. இதுதொடர்பாக கீழமை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, நான் குடியிருந்துவரும் வீட்டில்எந்த பிரச்சினையும் செய்யக்கூடாது என கடந்த மார்ச் 12-ம்தேதி தடையுத்தரவு பெற்றேன்.

அதன்பிறகு வதனி சில வழக்கறிஞர்களை அழைத்துக்கொண்டு தண்டையார்பேட்டை போலீஸாருடன் சேர்ந்து கொண்டு அடாவடியாக எனது வீட்டைக் கைப்பற்றிக் கொண்டார். எனவே சம்பந்தப்பட்ட போலீஸார் மற்றும் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ப.விஜேந்திரன், வீட்டை கையகப்படுத்தும்போது அங்கு கூடியிருந்த வழக்கறிஞர்கள், போலீஸாரின் புகைப்படத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

அதைப்பதிவு செய்து கொண்ட நீதிபதி இதுபோன்ற சம்பவங்கள் இனி எதிர்காலத்தில் நடக்கக்கூடாது. வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில்தான் பணியாற்ற வேண்டுமேயன்றி, இதுபோல தங்களது கட்சிக்காரர்களுடன் சென்று சொத்துகளை கையகப்படுத்தும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடக்கூடாது. வழக்கறிஞர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது புனிதமான வழக்கறிஞர் தொழிலை அசிங்கப்படுத்துவதற்கு சமம். இந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுத்தால்தான் இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாது. எனவே இந்த வழக்கில் தொடர்புடைய தண்டையார்பேட்டை காவல் ஆய்வாளர் கிருஷ்ணராஜ் மற்றும் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்கள் இன்று (மார்ச் 28) பிற்பகலில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x