

குன்னூர்: குன்னூர் வெலிங்டனில் ராணுவவீரர் மற்றும் ராணுவ வீராங்கனைகளின் குதிரை சாகச நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் வெலிங்டன் ராணுவ மையப் பகுதிகளில் ராணுவ வீரர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இவர்களுக்கு சிறப்புப் பயிற்சியாக குதிரை சவாரி, ஜிம்கானாவில் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், குன்னூரில் `மவுண்டன் ஜிம்கானா' என்ற பெயரில் 50-க்கும் மேற்பட்ட ராணுவஅதிகாரிகள் மற்றும் வீராங்கனைகள் கலந்துகொண்ட குதிரை சாகச நிகழச்சி நேற்று நடைபெற்றது. இதில், குதிரைக்கான ஓட்டப்பந்தயம், 4 ஜம்பிங், ஷோ ஜம்பிங், டிரிக் ஜம்பிங், பால் அண்ட் பக்கெட்ரேஸ் உட்பட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இதில் குதிரைகளை லாவகமாக இலக்கை நோக்கி செலுத்தி, ராணுவ வீரர், வீராங்கனைகள் அசத்தினர்.
இலக்கை நோக்கி... தொடர்ந்து நடைபெற்ற சாகச நிகழ்ச்சியில், நெருப்பு வளையம், ஜீப், இருசக்கர வாகனங்களைத் தாண்டி, இலக்கை நோக்கி குதிரைகள் பாய்ந்து சென்றன. குதிரையில் இருந்தே ஈட்டி வீசும் போட்டியும் நடத்தப்பட்டது.
வெற்றிபெற்ற வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு ராணுவப் பயிற்சி முகாம் கமாண்டன்ட் லெப். ஜெனரல் வீரேந்திரவாட்ஸ், கேடயம் மற்றும் பதக்கங்களை வழங்கினார்.