Published : 28 Mar 2024 05:57 AM
Last Updated : 28 Mar 2024 05:57 AM

குடும்பத்தை வளமாக்க வேண்டும் என்பதற்காக கொள்ளையடிப்பதே திமுகவின் குறிக்கோள்: இபிஎஸ் விமர்சனம்

நாகர்கோவிலில் நேற்று நடைபெற்ற அதிமுக பொதுக் கூட்டத்தில், குமரி மக்களவைத் தொகுதி வேட்பாளர் பசிலியான் நசரேன், விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் ராணி ஆகியோரை ஆதரித்துப் பேசினார் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி. படம்: மு.லெட்சுமி அருண்

நாகர்கோவில்: குடும்பத்தை வளமாக்க வேண்டும் என்பதற்காக கொள்ளையடிப்பதே திமுகவின் குறிக்கோள் என்றுஅதிமுக பொதுச் செயலாளர்பழனிசாமி கூறினார்.

நாகர்கோவிலில் நேற்று மாலை நடைபெற்ற அதிமுக தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில், குமரி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் பசிலியான் நசரேன், விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் ராணி ஆகியோருக்கு ஆதரவாக பழனிசாமி பேசியதாவது:

குமரி மாவட்டத்தில் விவசாயம், மீன்பிடி மற்றும் சுற்றுலாத் தொழில்கள் முக்கியமானவை. நான் விவசாயி என்பதால், இதில் உள்ள பிரச்சினைகள், ஏற்றத் தாழ்வுகள் தெரியும். விவசாயிகளின் விளை பொருளுக்கு உரிய விலை கிடைப்பதில்லை. ரப்பர் உள்ளிட்ட விளை பொருட்களுக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய அதிமுக வேட்பாளர் மக்களவைக்கு செல்ல வேண்டும். இங்கிருந்து பாஜக, காங்கிரஸை சேர்ந்தவர்கள்தான் மாறிமாறி எம்.பி.யாகின்றனர். இந்த முறை மீனவச் சமுதாயத்தை சேர்ந்தவரை நிறுத்தியுள்ளோம். அவரை வெற்றி பெறச் செய்தால், நல்ல திட்டங்கள் மக்களுக்குக் கிடைக்கும்.

நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.2,500 கொடுப்பதாக முதல்வர்ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார்.இதுவரை அதை நிறைவேற்றவில்லை. 520 திட்டங்களுக்கான அறிவிப்பை வாக்குறுதியாகக் கூறி, அதில் 10 சதவீதத்தைகூட நிறைவேற்றவில்லை. தேர்தல் சமயத்தில் வாக்குறுதி அளிப்பதும், பின்னர் கைவிடுவதும் திமுகவின் கைவந்த கலை.

திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும்தான் தனது குடும்பத்தினர் என்று ஸ்டாலின் கூறுகிறார். சாதாரண தொண்டர் திமுக தலைவராகி உள்ளாரா? ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களே அந்தப் பொறுப்புக்கு வருகின்றனர். ஆட்சி, அதிகாரத்தில் அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே உள்ளனர். இப்படி குடும்பம் வளமாகஇருப்பதற்காக கொள்ளையடிப்பது ஒன்றையே திமுக குறிக்கோளாகக் கொண்டுள்ளது.

மக்களை வதைக்கும் வகையில், வீட்டு வரியிலிருந்து குப்பைவரி வரை அனைத்து வரிகளையும் உயர்த்தியுள்ளனர். திமுக ஆட்சியில் சட்டம், ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. போதைப் பொருளைக் கடத்துவதற்கென்றே திமுகவில் அயலக அணி என்ற பிரிவு உள்ளது. திமுகவைச் சேர்ந்த ஜாபர் சாதிக் ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளார். போதை பொருட்கள் புழக்கத்தை திமுக ஆட்சியில் தடுக்க முடியவில்லை. இவ்வாறு பழனிசாமி பேசினார்.

கூட்டத்தில், தளவாய் சுந்தரம் எம்எல்ஏ மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x