Published : 27 Mar 2024 07:33 PM
Last Updated : 27 Mar 2024 07:33 PM

“போதைப்பொருள் கடத்தவே திமுகவில் அயலக அணி!” - இபிஎஸ் @ குமரி பிரச்சாரக் கூட்டம்

நாகர்கோவிலில் நடந்த பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார்.

நாகர்கோவில்: "போதைப்பொருள் கடத்துவதற்காகவே, திமுகவில் அயலக அணியை உருவாக்கி உள்ளனர். வேறு எந்த கட்சியிலுமே அயலக அணி என்று உருவாக்கியதே கிடையாது. இந்த அணியைச் சேர்ந்த ஜாபர் சாதிக் என்பவரை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்" என்று நாகர்கோவிலில் நடந்த பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி புதன்கிழமை பிரச்சாரம் மேற்கொண்டார். நாகர்கோவிலில் நடந்த பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் அவர் பேசியது: "இம்மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்மகன் உசேன் சிறுபான்மையினத்தைச் சேர்ந்தவர். அவர் அதிமுகவின் அவைத்தலைவராக இருக்கிறார். திமுகவில் இப்படி இருக்க முடியுமா? அதிமுகவில் மட்டும்தான் இருக்க முடியும். திமுகவில் இருக்கவே முடியாது. சிறுபான்மையினத்தைச் சேர்ந்த ஒருவர்கூட, திமுகவின் தலைமைப் பொறுப்புகளில் இல்லை. இதுதான் அதிமுகவுக்கும் திமுகவுக்கும் உள்ள வேறுபாடு.

விலைவாசி உயர்வு: தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கடந்த மூன்றாண்டுகளில் கடுமையான விலைவாசி உயர்வு, கிட்டத்தட்ட 40% உயர்ந்துவிட்டது. அரிசி கிலோவுக்கு ரூ.15 விலை அதிகரித்துவிட்டது. அனைத்து மளிகைப் பொருட்களின் விலையும் 40% உயர்ந்துவிட்டது. மக்களுக்கு வேலைவாய்ப்பு குறைந்துவிட்டது. வருமானம் குறை செலவுகள் அதிகரித்துவிட்டது. இதனால், மக்கள் சிரமப்படுகின்றனர். இந்த 3 ஆண்டு கால திமுக ஆட்சியை மக்கள் விரோத ஆட்சியாகத்தான் பார்க்கிறோம். இந்த மூன்றாண்டுகளில் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை.

இந்த கன்னியாகுமரி மாவட்டத்துக்கு ஏதாவது திட்டத்தைக் கொண்டு வந்துள்ளனரா? அதனால், இம்மாவட்ட மக்கள் ஏதாவது பலன் அடைந்துள்ளனரா? ஒன்றுமே கிடையாது. ஆனால், அவர்களது குடும்பம் வளமாகிறது. முதல்வர் ஸ்டாலின் குடும்பம் வளமாக இருக்க வேண்டும். மத்தியிலும், மாநிலத்திலும் அதிகாரத்தில் இருக்க வேண்டும். அங்கேயும் கொள்ளை அடிக்க வேண்டும், இங்கேயும் கொள்ளை அடிக்க வேண்டும் அதுதான் திராவிட மாடல் ஆட்சி.

மின் கட்டண உயர்வு: திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு சொத்துவரியே விதிக்க மாட்டோம் என்று கூறினர். ஆனால், கடைகளுக்கான வரியை 150 சதவீதம் உயர்த்திவிட்டனர். ரூ.2 ஆயிரம் வரி கட்டி வந்த கடைகள் இன்றைக்கு ரூ.5 ஆயிரம் வரி செலுத்த வேண்டும். ஆயிரம் ரூபாய் வரி செலுத்திய வீடுகள், இப்போது இரண்டாயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். அதிமுக ஆட்சியில், மின் கட்டணம் உயராமல் பார்த்துக் கொண்டோம். ஆனால், திமுக ஆட்சியில் 52% மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

இதை எப்படி மக்கள் தாக்குப்பிடிப்பார்கள்? அதுமட்டுமல்ல, குறிப்பிட்ட யூனிட்டுக்கு மேல் மின்சாரத்தைப் பயன்படுத்தினால், இருமடங்கு கட்டணம் செலுத்த வேண்டும். அதிமுக ஆட்சியில் 2000 ரூபாய் மின் கட்டணம் செலுத்தியிருந்தால், திமுக ஆட்சியில் 5000 ரூபாய் செலுத்த வேண்டும். பீக் ஹவர் சமய மின் பயன்பாடுகளுக்கான கட்டணம் இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. இப்படி, திமுக ஆட்சிக்கு வந்தபிறகு, வீட்டுவரி, மின் கட்டணம், குடிநீர் வரி அனைத்தும் உயர்ந்துள்ளது. தற்போது குப்பை வரி வேறு போட்டுவிட்டனர்.

சட்டம் ஒழுங்கு: அனைத்து இடங்களிலும் வரி போடுகிற அரசாங்கம் திமுக அரசுதான். ஆனால், கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றிய அரசு அதிமுக அரசு. தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. எங்கு பார்த்தாலும், கொலை, கொள்ளை, வழிப்பறி நடக்கிறது. திமுக ஒன்றியச் செயலாளர் ஒருவர் கனிமவளத்தை திருடும்போது, காவலர் ஒருவர் அதை தடுத்து நிறுத்திப் பிடிக்கிறார். உடனடியாக திமுக பொறுப்பாளர்கள் அந்த காவலரை கடுமையாக தாக்குகின்றனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஒரு காவலருக்கே இந்த நிலை என்றால், இங்குள்ள மக்களுக்கு என்ன நிலைமை? தமிழகத்தில் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை. மக்களுக்கு யார் பாதுகாப்பு கொடுப்பது? திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து போய்விட்டது. இன்னொரு ஒன்றியச் செயலாளர் ஒரு டிரைவரை கொலை செய்துவிட்டார். அவரை கைது செய்துள்ளனர். இந்த ஒரு மாவட்டத்தில் மட்டும் இப்படிப்பட்ட நிலைமை.

திமுக பொதுக் குழுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், நான் நாள்தோறும் இரவில் தூங்கி காலையில் கண் விழிக்கும்போது, திமுக கட்சிக்காரர்களால் என்ன நடக்குமோ என்று அச்சத்தில் கண் விழிக்கிறேன் என்று திமுக தலைவரே கூறுகிறார். இது முதல்வரே கூறியது. இவரை நம்பி எப்படி நாட்டை ஒப்படைக்கலாம். நான் அரசியலுக்காக பேசவில்லை. ஒரு முதல்வர் தன்னுடைய கட்சிக்காரர்கள் எப்படி இருப்பார்கள் என்பதை அவரே இப்படி கூறியிருக்கிறார் என்றால், இப்படிப்பட்ட கட்சிக்காரர்களைக் கொண்ட ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எப்படி சிறப்பாக இருக்க முடியும்.

போதைப்பொருள் கடத்துவதற்காகவே, திமுகவில் அயலக அணியை உருவாக்கி உள்ளனர். வேறு எந்த கட்சியிலுமே அயலக அணி என்று உருவாக்கியதே கிடையாது. இந்த அணியைச் சேர்ந்த ஜாபர் சாதிக் என்பவரை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். நமது நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு போதைப்பொருள் கடத்துவதாக கிடைத்த தகவலின்பேரில் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து, 2000 கோடி மதிப்புள்ள போதைப்பொருளை பறிமுதல் செய்துள்ளனர்” என்று அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x