

விழுப்புரம்: “இந்தத் தேர்தல் ஜனநாயகத்துக்கும் பாசிசத்துக்கும் நடக்கும் தேர்தல் அல்ல, போர்” என்று அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.
ஆரணி மக்களவை தொகுதிக்குட்பட்ட செஞ்சி சட்டமன்ற தொகுதியில் உள்ள செம்மேடு கிராமத்தில் இன்று திமுக கூட்டணி சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் அமைச்சர் செஞ்சி மஸ்தான் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு பேசியது: ''அனைத்து கூட்டணிக் கட்சி நிர்வாகிகளை ஒருங்கிணைக்க வேண்டும். இந்தத் தேர்தல் ஜனநாயகத்துக்கும் பாசிசத்துக்கும் நடக்கும் தேர்தல் அல்ல; 'போர்' என பிரகனப்படுத்துகிறேன்.
இந்தத் தேர்தல் சமூக நீதிக்கும், மனுநீதிக்கும் இடையே நடைபெறும் தேர்தல். கடவுள் அனைவருக்கும் பொதுவானவர். ஆனால், பிறப்பை வைத்து வேறுபடுத்துகிறது மனுநீதி. சமூக நீதி என்பது பெரியார் வகுத்த கொள்கையை பின்பற்றுவதாகும்.
24 மணி நேரமும் உழைத்துக்கொண்டுள்ள நம் முதல்வரின் சாதனைகளை பாருங்கள். புதுமைப் பெண் திட்டம் மிக சிறப்பான திட்டம். எங்கு பார்த்தாலும் தற்போது பெண்கள் நிறைந்துள்ளனர். ஒரு ஆட்சியர் அலுவலகத்துக்கு சென்றிருந்தேன். அங்கு ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், கோட்டாட்சியர் எல்லோரும் பெண்களாக இருந்தனர். வட்டாட்சியர் ஆண் தானே என்றேன். அவரும் பெண் என்றார்கள். ஆனால், சமூகத்தில் ஆணுக்கு கிடைக்கும் சுதந்திரம் பெண்ணுக்கு மறுக்கப்பட்டதால் அவர்கள் முன்னேற புதுமைப்பெண் திட்டம் உருவானது.
விடியல் பயணம் என்றால் மகளிருக்கு அரசு பேருந்தில் இலவச பயணம். இப்பயணம் மூலம் மாதம் 888 ரூபாய் ஒவ்வொரு பெண்ணுக்கும் சேமிப்பு கிடைக்கிறது. இதே போலதான் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக முதல்வர் கொண்டுவந்த காலை சிற்றுண்டி திட்டம். வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருக்கும் பெண்களுக்காக கொண்டு வந்த திட்டம் மகளிர் உரிமை திட்டமாகும். வீதி வீதியாக நம் அரசின் திட்டங்களை சொல்லுங்கள்.
10.5 சதவீத இட ஒதுக்கீடுக்கு நாங்கள் எதிரி அல்ல. இதை அமல்படுத்தினால் வன்னிய மக்களுக்குதான் நஷ்டம். வன்னியர்களின் குழந்தைகள் பள்ளிக் கல்லூரிகளில் 37 சதவீதத்தினர் படித்து வருகின்றனர். மாவட்டத்தில் உள்ள நியாய விலைக் கடைகளில் 40 சதவீதம் வன்னியர்களாக உள்ளனர். இதேபோல அனைத்து துறைகளில் இடஒதுக்கீடு சதவீதத்துக்கு அதிகமாக வன்னியர்கள் இடம்பெற்றுள்ளனர். இதையெல்லாம் கணக்கெடுத்து பார்த்துள்ளோம்.
குஜராத்தில் மோடி பலமுறை முதல்வராக இருந்துள்ளார். அவர் பிரதமராக பதவியேற்றவுடன் மாநில உரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார் என்று நம்பினோம். ஆனால் மாநில உரிமையில் இருந்ததை கல்வியை மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்து நீட் தேர்வு மற்றும் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தினார். இதன் மூலம் மாநிலங்களின் கல்வி உரிமைகளைப் பறித்தார்.
10 ஆண்டுகால ஆட்சி ட்ரைலர் என்று பாஜகவினர் சொல்கிறார்கள். ரூ.400 விற்ற சமையல் எரிவாயு உருளை இப்போது ரூ.900-க்கு விற்கப்படுகிறது. மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் இது 3 மடங்கு உயர்ந்துவிடும். மாநில அரசு கட்டுப்பாட்டில் வாட் வரி இருந்ததால் நியாய விலைக்கடையில் துவரம் பருப்பு ரூ.30-க்கு கொடுக்க முடிந்தது. இப்போதைய விலையேற்றத்துக்கு ஜிஎஸ்டிதான் காரணமாகும்'' என்று அவர் பேசினார்.
இக்கூட்டத்தில் ஒன்றியத் தலைவர் விஜயகுமார், செஞ்சி பேரூராட்சித் தலைவர் மொக்தியார் அலி, முன்னாள் எம்எல்ஏக்கள் செந்தமிழ் செல்வன், ராமமூர்த்தி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த், காங்கிரஸ் துணைத் தலைவர் ரங்கபூபதி, மதிமுக துணைப்பொதுச் செயலாளர் ஏ.கே.மணி, சிபிஐ ஏ.வி.சரவணன், மக்கள் நீதி மய்யத்தின் வடக்கு மண்டல பொறுப்பாளார் ஸ்ரீபதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.