Published : 27 Mar 2024 03:49 PM
Last Updated : 27 Mar 2024 03:49 PM

“நீலகிரி தொகுதி மக்கள் மிகப் பெரிய வெற்றியை தருவர்” - வேட்புமனு தாக்கல் செய்த ஆ.ராசா நம்பிக்கை

உதகை: “ஊழலையும், மதவாதத்தையும் ஒன்றாக இணைத்து இந்திய அரசியல் சட்டத்தை சிதைத்து, இந்திய துணை கண்டத்தில் இருக்கின்ற பல்வேறு மொழிகள், பல்வேறு பண்பாடுகள், பல்வேறு இனங்கள் பல்வேறு கலாசார அடையாளங்கள் அத்தனையும் அழித்து, ஒற்றை சர்வாதிகார ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்று பிரதமர் மோடி நினைக்கிறார்” என நீலகிரி எம்பி ஆ.ராசா குற்றம் சாட்டியுள்ளார்.

நீலகிரி மக்களவைத் தொகுதிக்கு திமுக சார்பில் வேட்பாளராக ஆ.ராசா அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் தனது வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்தார். இதற்காக உதகையில் உள்ள திமுக அலுவலகத்தில் அண்ணா மற்றும் கருணாநிதி சிலைகளுக்கு மாலை அணிவித்து, கூட்டணி கட்சி தொண்டர்கள் மத்தியில் பேசினார்.

பின்னர் அங்கிருந்து வேட்புமனு தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தார். அவருடன் சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமசந்திரன், திருப்பூர் எம்எல்ஏ செல்வராஜ், நீலகிரி மாவட்ட திமுக செயலாளர் பா.மு.முபாரக் வந்தனர். அவர்கள் முன்னிலையில் ஆ.ராசா தனது வேட்பு மனுவை மாவட்ட ஆட்சியர் மு.அருணாவிடம் தாக்கல் செய்தார்.

தொடர்ந்து நிருபர்களிடம் அவர் கூறும்போது, “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் மீண்டும் அழுத்திச் சொல்லி கொண்டு வருவது போல், இந்த தேர்தல் அரசியல் அமைப்பை காப்பாற்ற வேண்டிய தேர்தல். காப்பாற்ற வேண்டும் என்று நம்பிக்கை உள்ளவர்கள் ஓரணியில் நிற்க வேண்டிய தேர்தல்.

ஊழலையும், மதவாதத்தையும் ஒன்றாக இணைத்து இந்திய அரசியல் சட்டத்தை சிதைத்து, இந்திய துணை கண்டத்தில் இருக்கின்ற பல்வேறு மொழிகள், பல்வேறு பண்பாடுகள், பல்வேறு இனங்கள் பல்வேறு கலாசார அடையாளங்கள் அத்தனையும் அழித்து, ஒற்றை சர்வாதிகார ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்று பிரதமர் மோடி நினைக்கிறார்.

அவரது ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ள அறிவுரையை ஏற்று நீலகிரி மக்களவைத் தொகுதியில் களமிறக்கப்பட்ட எனக்கு மக்கள் மிக பெரிய வெற்றி தருவார்கள் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x