வேட்பாளர்களின் உடற்தகுதி சான்று சமர்ப்பித்தலை கட்டாயமாக்க கோரிய வழக்கு தீர்ப்புக்காக ஒத்திவைப்பு

வேட்பாளர்களின் உடற்தகுதி சான்று சமர்ப்பித்தலை கட்டாயமாக்க கோரிய வழக்கு தீர்ப்புக்காக ஒத்திவைப்பு
Updated on
1 min read

சென்னை: தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் உடற்தகுதி சான்று சமர்ப்பித்தலைக் கட்டாயமாக்கக் கோரிய வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக தள்ளிவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், கோவையைச் சேர்ந்த எஸ்.வி.சுப்பையா என்பவர், கடந்த 2016-ம் ஆண்டு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ‘தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்யும் போது, சொத்து விவரம், குற்ற வழக்குகள் பற்றிய தகவல்களை தாக்கல் செய்யப்படுகிறது. அத்துடன், 30 நாட்களுக்கு முந்தைய வேட்பாளரின் மருத்துவ பரிசோதனை அறிக்கையுடன், பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் ஆணையம் தரப்பில், வேட்பாளர்களின் உடல்நிலை குறித்த பரிசோதனை அறிக்கை என்பது சம்பந்தப்பட்டவர்களின் தனிப்பட்ட அந்தரங்க விஷயம்.எனவே, அந்த விவரங்களை கேட்க முடியாது.

மேலும், இதுதொடர்பாக விரிவான ஆலோசனைகள் மேற்கொள்ள வேண்டும். மருத்துவ பரிசோதனை அறிக்கையை சமர்ப்பிக்க அறிவுறுத்த வேண்டுமெனில், அது தொடர்பாக சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும். இது கொள்கை முடிவு சம்பந்தப்பட்டது என்று விளக்கம் அளித்திருந்தார்.

அப்போது மனுதாரர் தரப்பில் , தன்னால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதியின் உடல் நிலையை தெரிந்துகொள்ள வாக்காளர்களுக்கு உரிமை உள்ளது. மருத்துவ காப்பீடு பெற மருத்துவ பரிசோதனை அறிக்கைகள் அளிக்கப்படுகிறது. வேட்பாளர்களுக்கு ஏன் வலியுறுத்தக் கூடாது என வாதிட்டிருந்தார். இதையடுத்து, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கு இருக்கும் நோய்கள் பற்றி தெரிவிக்க வற்புறுத்த முடியாது எனக்கூறி வழக்கு தள்ளி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in