

வரும் மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான இண்டியா கூட்டணிக்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவு தெரிவித்துள்ளது.
சென்னை மண்ணடியில் உள்ள இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்தில் தேசியத் தலைவர் எஸ்.எம்.பாக்கர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: பாரதிய ஜனதா கட்சியின் 10 ஆண்டு செயல்பாடுகள் இந்திய தேசத்தின் பன்முகத்தன்மையை சிதைத்து வருகிறது.
எனவே, இந்திய தவ்ஹீத் ஜமாஅத்-ன் கிளை, மாவட்ட, மாநில மற்றும் அணிகள் ஆகியோரின் ஆலோசனையின் அடிப்படையில், இந்திய தவ்ஹீத் ஜமாஅத், வரும் மக்களவைத் தேர்தலில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான, திமுக தலைமை வசிக்கும் இண்டியா கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பது என்று முடிவெடுத்துள்ளது.
தமிழக மக்கள் 40 தொகுதிகளிலும் இண்டியா கூட்டணி வேட்பாளர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்து இந்தியாவை காப்பாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது, இந்திய தவ்ஹீத் ஜமாஅத் துணைத் தலைவர் முகம்மது முனீர், துணை பொதுச் செயலாளர் முஹம்மது ஷிப்லி, பொருளாளர் பிர்தவ்ஸ், மாநில செயலாளர் அபுபைசல் ஆகியோர் உடனிருந்தனர்.