Published : 03 Feb 2018 08:24 AM
Last Updated : 03 Feb 2018 08:24 AM

சரத்குமார்-சீமான் இணைந்து செயல்பட முடிவு

தமிழகத்தின் நலன் கருதி, பல்வேறு பிரச்சினைகளில் இணைந்து செயல்பட சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் நடிகர் சரத்குமாரும், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் முடிவு செய்துள்ளனர்.

மதுரை விமான நிலையத்தில் சரத்குமார், சீமான் ஆகிய இருவரும் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது நடிகர் சரத்குமார் கூறியதாவது: மத்திய அரசின் பட்ஜெட் ஏழைகளுக்கானது அல்ல. கடந்த 4 ஆண்டுகளில், விவசாயிகளுக்கு எதுவும் செய்யவில்லை. எஞ்சிய ஆண்டிலும் எதுவும் செய்யப் போவதுமில்லை.

இந்தியாவில் 50 கோடி மக்கள் வறுமைக்கோட்டுக்கு கீழ் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் 10 கோடி மக்களுக்கு மட்டும் காப்பீட்டு திட்டம் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 40 கோடி மக்களின் நிலை என்ன என்ற கேள்வி எழுகிறது. பட்ஜெட்டில் ரயில்வே திட்டம் என தமிழகத்துக்கு எதுவும் இல்லை என்றார்.

பின்னர், ராஜபாளையத்தில் அவர் கூறுகையில், மாநிலத்தில் சக்திவாய்ந்த தலைவரான ஜெயலலிதாவை இழந்து அக்கட்சி பல்வேறு போராட்டங்களை சந்தித்து வருகிறது. இந்த அரசின் செயல்பாடுகள் பரவாயில்லை என்றார்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது: மருத்துவம் உட்பட பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு மத்திய அரசு தாரை வார்க்கிறது. மாணவர்களுக்கு இலவச பேருந்து வசதியை ஏற்படுத்த முடியாத மத்திய அரசு, மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக்கல்லூரி அமைக்கும் திட்டம் சாத்தியமில்லை.

பொதுத் தேர்தலை கருத்தில் கொண்டே பட்ஜெட் போட்டுள்ளனர். வெளிநாட்டு இறக்குமதி பொருட்களுக்கு வரி விதிக்கப்படும் என்றால், இறக்குமதி பொருட்களை உள்நாட்டில் ஏன் உற்பத்தி செய்ய முடியவில்லை. கார்ப்பரேட் நிறுவனங்களை ஊக்குவிக்கவே இது போன்று மத்திய அரசு செயல்படுகிறது.

தமிழகத்தின் வளர்ச்சிக்கென எந்த திட்டமும் பட்ஜெட்டில் இல்லை. மக்கள் மிகவும் எதிர்பார்த்த தனிநபர் வருமான உச்சவரம்பு குறித்தும் எந்த அறிவிப்பும் இல்லை என்றார்.

இருவரும் திடீரென இணைந்து பேட்டி அளித்தது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, இனிமேல் தமிழகத்தின் நலன்கருதி பல்வேறு பிரச்சினைகளில் இருவரும் இணைந்து செயல்படுவோம் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x