சென்னையில் தாமதமான ஆவின் பால் விநியோகம்: காரணம் என்ன?

சென்னையில் தாமதமான ஆவின் பால் விநியோகம்: காரணம் என்ன?

Published on

சென்னை: சென்னையில் இன்று (புதன் கிழமை) காலை ஒருசில பகுதிகளில் ஆவின் பால் விநியோகம் சில மணி நேரம் தாமதமாக விநியோகிக்கப்பட்டது. வழக்கம்போல் அதிகாலையிலேயே பால் வாங்கவந்த ஆவின் வாடிக்கையாளர்கள் மத்தியில் இது அதிருப்தியை ஏற்படுத்தியது. பால் விநியோகம் தாமதமாகும் என்று முன் கூட்டியே ஆவின் நிர்வாகம் அறிவித்திருந்த நிலையில் தாமதத்துக்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.

முன்னதாக இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்ட ஆவின் நிர்வாகம், “சென்னை முழுவதும் பொதுமக்கள் விரும்பிப் பருகும் ஆவின் பால் விநியோகம் தவிர்க்க முடியாத சில காரணங்களால் பெரம்பூர், அண்ணாநகர், அயனாவரம், வில்லிவாக்கம், கொரட்டூர், மயிலாப்பூர், வேளச்சேரி, தாம்பரம் மற்றும் அடையார் ஆகிய பகுதிகளில் பால் விநியோகம் ஒரு சில மணி நேரம் தாமதமாக விநியோகிக்கப்பட வாய்ப்புள்ளது.

ஆவின் நிர்வாகம் பல்வேறு போர்க்கால நடவடிக்கைகள் மேற்கொண்டு அனைத்து இடங்களுக்கும் சீரான பால் விநியோகத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. இருப்பினும் இத்தகைய காலதாமதத்துக்கு ஆவின் நிர்வாகம் வருந்துகிறது.

மேலும் இந்த சூழ்நிலையில் ஆவின் நிர்வாகத்துக்கு பொதுமக்கள் அனைவரும் தங்கள் ஒத்துழைப்பை நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

காரணம் என்ன? இந்நிலையில் தாமதத்துக்கான காரணம் தெரியவந்துள்ளது. அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் ஒப்பந்த வாகன ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாலேயே பால் விநியோகம் தாமதமானதாகத் தெரியவந்துள்ளது. ஆவின் ஒப்பந்த வாகனங்களுக்கு வழங்கப்பட்ட எரிபொருளுக்கான பணம் ரூ.2 குறைத்து வழங்கப்பட்டதால் ஒப்பந்த வாகன ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பெட்ரோல், டீசல் விலைக்கு ஏற்பவே எப்போதும் ஒப்பந்த வாகனங்களுக்கு பணம் வழங்கப்பட்ட நிலையில் திடீரென ரூ.2 குறைக்கப்பட்டதால் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுவே போராட்டத்துக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in