

சென்னை: மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதற்காக, ஓய்வு பெற்ற நீதிபதி சி.எஸ்.கர்ணன் உள்பட 8 பேர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.
மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் ஷெனாய் நகரில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் வரை 9 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி சி.எஸ்.கர்ணன் உட்பட 8 பேர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர். பின்னர் கர்ணன் கூறும்போது, ``எனது கட்சியின் பெயர் `லஞ்ச ஒழிப்பு செயலாக்க கட்சி'. 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மத்திய சென்னை தொகுதியில் பலாப்பழம் சின்னத்தில் போட்டியிட்டேன். தற்போது, 2-வது முறையாக போட்டியிட விரும்புகிறேன்.
நீதித்துறை உட்பட பல்வேறு துறைகளில் லஞ்சத்தை ஒழிப்பதுதான் எனது குறிக்கோள். நான் தேர்தலில் வெற்றி பெற்றால் 4 லட்சம் பேருக்கு அரசு வேலை கொடுப்பேன். ரூ.20 லட்சம் கோடி லஞ்சப் பணத்தை பறிமுதல் செய்து அரசுக் கருவூலத்தில் சேர்ப்பேன்'' என்றார்.
அதேபோல ஜிஎஸ்டி முன்னாள் உதவி ஆணையரும் ஐஆர்எஸ் அதிகாரியுமான பாலமுருகன், வடசென்னை தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார். அவர் கூறுகையில், ‘‘100 சதவீதம் வாக்களித்தல், பணம் பட்டுவாடா இல்லாமல் வாக்களித்தல் ஆகியவற்றை வலியுறுத்தி நான் ‘ஒருவிரல் புரட்சி’ என்ற இயக்கத்தை நடத்தி வருகிறேன்.
இந்தத் தேர்தலில் பணம் பட்டுவாடா செய்வதைத் தடுக்க உள்ளேன். வடசென்னை பகுதி சுற்றுச்சூழல் மாசால் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, இப்பகுதியை சுற்றுச்சூழல் மாசில்லா பகுதியாக மாற்றுவேன்’’ என்றார்.