Published : 27 Mar 2024 06:19 AM
Last Updated : 27 Mar 2024 06:19 AM
காஞ்சி/செங்கை/திருவள்ளூர்: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மக்களவை தொகுதிகளில் இதுவரை 47 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். காஞ்சிபுரம் மக்கள்ளவை தொகுதியில் நேற்று முன்தினம் 6 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று சுயேட்சை வேட்பாளர்கள் செல்வம், சூர்யா, நரேஷ் பாரதி ஆகிய 3 பேர் மனு தாக்கல் செய்தனர். இதுவரை 9 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த 9 பேர் தவிர்த்து சில கட்சியின் வேட்பாளர்கள் 2 மனுக்களும், மாற்று வேட்பாளர்களாக 2 பேரும் மனு தாக்கல் செய்துள்ளனர்.
பெரும்புதூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் தமிழக முற்போக்கு மக்கள்கட்சியை சேர்ந்த வேட்பாளர் பழனியப்பன் (63). இவர் தர்மபுரி மாவட்டம் மஞ்சவாடிகனவாய் பகுதியை சேர்ந்தவர். எட்டு வழிசாலை போராட்டக் குழு ஒருங்கிணைப் பாளராகவும் இருந்து வருகிறார்.
இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியின் தேர்தல் அலுவலர் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ச. அருண்ராஜிடம் பழனியப்பன் தலையில் பொம்மைவிமானத்தை வைத்துக் கொண்டு வேட்பு மனு தாக்கல் செய்தார்.
சென்னை அருகே பரந்தூரில் இரண்டாவது விமான நிலையம் அமைந்தால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்படும். எனவே மாற்று இடத்தில் விமான நிலையம் அமைக்க கோரி வேட்பாளர் பழனியப்பன் தலையில் பொம்மை விமானம் வைத்துக்கொண்டு வேட்பு மனு தாக்கல் செய்ததாக தெரிவித்தார்.
இதேபோல், சுயேட்சைகள் வி.கே வெங்கடேஷ், டி.சி கார்த்திக் குமார், ஜின்னா முகமது,அயோத்தி லட்சுமணன், மகாத்மா மக்கள் முன்னேற்ற கழகம் எஸ் அம்பேத்குமார், வீர தியாகி விஸ்வநாத தாஸ் தொழிலாளர்கள் கட்சி எஸ். சிவகுமார், ஜெபமணி ஜனதா கட்சியைச் சார்ந்த ஜே. மோகன்ராஜ், தேசிய மக்கள் சக்தி கட்சி சி. அரவிந்த் உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்துள்ளனர். இதுவரை அதிமுக, திமுகவினர் உட்பட 25 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
திருவள்ளூர் (தனி) மக்களவை தொகுதியின் நாம் தமிழர் கட்சி வேட்பாளரான, அக்கட்சியின் மாதவரம் சட்டப்பேரவை தொகுதியின் தகவல் தொழில்நுட்பப் பாசறை செயலாளர் மு.ஜெகதீஷ் சந்தர், திருவள்ளூர் ஜெ.என்.சாலை, சி.வி.என். சாலைகள் வழியாக சோழ மன்னன் ராஜராஜசோழன், மகாகவி பாரதியார், சட்டமேதை அம்பேத்கர் வேடமிட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோருடன் ஊர்வலமாக வந்து, மாவட்ட தேர்தல் அலுவலர் பிரபுசங்கரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். திருவள்ளூர் மக்களவை தொகுதியில் நேற்று வரை 13 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப் பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT