

சிவகங்கை: ‘‘கும்பகர்ணன் கூட 6 மாதம்தான் தூங்குவார்; ஆனால் கார்த்தி சிதம் பரமோ 5 ஆண்டுகள் தூக்கத்தில் இருந்தார்’’ என சிவகங்கை தொகுதி அதிமுக வேட்பாளர் சேவியர்தாஸ் குற்றம் சாட்டினார்.
சிவகங்கையில் நடைபெற்ற அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் அவர் பேசியதாவது: 7 முறை வென்று மத்திய அமைச்சராக இருந்தவர் ப.சிதம்பரம். தற்போது எம்பியாக இருப் பவர் கார்த்தி சிதம்பரம். ஆனால் தந்தையும், மகனும் சிவகங்கை தொகுதிக்கு ஒரு துரும்பைக் கூட கிள்ளி போடவில்லை. தொகுதிக்கு ஒன்றும் செய்யவில்லையே என கார்த்தி சிதம்பரத்திடம் செய்தியாளர்கள் கேட்டால், முன்னாள் எம்பி செந்தில் நாதனை கேளுங்கள் என்கிறார்.
தந்தையும், மகனும் ஒன்றும் செய்யாததால்தான் முன்னாள் எம்பியை கேட்க சொல்கிறார். கரோனா, கஜா புயலின் போது 600 லாரிகளில் நிவாரணப் பொருட்களை கொண்டு சென்று வழங்கியவர்தான் முன்னாள் எம்பி செந்தில்நாதன். மீண்டும் போட்டியிடும் கார்த்தி சிதம்பரம் பல வாக்குறுதிகளை கூறி வருகிறார். இதேபோல் கூறிவிட்டு அவரும், அவரது தந்தையும் 30 ஆண்டுகளாக ஒரு வாக்குறுதியைக் கூட நிறைவேற்றாமல் ஏமாற்றி வருகின்றனர்.
கும்பகர்ணன் கூட 6 மாதம் தூங்கி, 6 மாதம் விழித்திருந்தார். ஆனால் கார்த்தி சிதம்பரமும், அவரது குடும்பத்தினரும் தூக்கத்தில் இருந்து 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை விழிக்கின்றனர். நீங்கள் காலையில் புது டெல்லியில் டிபன் சாப்பிட்டு, மாலையில் லண்டனில் சாப்பி டலாம். ஆனால் மக்களோடு மக்களாக அதிமுக எப்போதும் இருக்கும். என்னை பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு யார் என்று தெரியவில்லை என்று கார்த்தி சிதம்பரம் கூறுகிறார். என்னை யாரென்று தேர்தல் முடிவில் மக்கள் காட்டுவர். விவசாயக் குடும்பத்தை சேர்ந்த என்னை வேட்பாளராக அறிவித்துள்ளனர். இது அதிமுகவில் மட்டுமே சாத்தியம் என்று அவர் பேசினார்.