

தருமபுரி: தருமபுரி மக்களவைத் தொகுதியில் பாமக வேட்பாளராக போட்டியிடும் சவுமியா அன்புமணிக்கு ரூ.60.23 கோடி மதிப்பிலான சொத்துகள் உள்ளன.
தருமபுரி மக்களவை தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி போட்டியிடுகிறார். பாமக தலைவரின் மனைவியான இவர் வேட்புமனு தாக்கலின்போது அளித்த பிரமாண பத்திரத்தில், தனக்கு விவசாயம் சார்ந்த வருவாயாக ரூ.28 லட்சம், விவசாயம் சாராத வருவாயாக ரூ.1 கோடியே 54 லட்சத்து 4 ஆயிரத்து 70 பணம் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இவை தவிர, ரூ.20 லட்சத்து 71 ஆயிரத்து 840 மதிப்பிலான 25.90 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.1 கோடியே 92 லட்சத்து 1120 மதிப்பிலான 2 ஆயிரத்து 927 கிராம் தங்க நகைகள் மற்றும் ரூ.1 கோடியே 64 லட்சத்து 38 ஆயிரத்து 835 மதிப்பிலான 151.5 கேரட் வைர நகைகள் ஆகியவை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அவர் பெயரில் மட்டும் வருவாய் மற்றும் நகைகள் என மொத்தம் ரூ.5 கோடியே 59 லட்சத்து 15 ஆயிரத்து 865 இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவை உட்பட சவுமியா அன்புமணி, அவரது கணவர் அன்புமணி ராமதாஸ், இவர்களின் மகள் சஞ்சுத்ரா ஆகியோர் பெயரில் அசையும், அசையா சொத்துக்கள், நகைகள் உள்ளிட்டவையாக ரூ.60 கோடியே 23 லட்சத்து 83 ஆயிரத்து 186 உள்ளது. அதேபோல, பல்வேறு வகையில் கடனாக ரூ.9 கோடியே 15 லட்சத்து 40 ஆயிரத்து 738 உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
திமுக வேட்பாளர்: அதேபோல, திமுக வேட்பாளர் ஆ.மணி தன் பெயரிலும், தன் மனைவி புவனேஸ்வரி பெயரில் என அசையும், அசையா சொத்துக்களாக ரூ.7 கோடியே 46 லட்சத்து 62 ஆயிரத்து 22 இருப்பதாகவும், கடனாக ரூ.2 கோடியே 12 லட்சத்து 87 ஆயிரத்து 262 இருப்பதாகவும் வேட்புமனுவின்போது அளிக்கப்பட்ட பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக வேட்பாளர்: அதிமுக வேட்பாளர் ஆர்.அசோகன் தன் பெயரிலும், தன் மனைவி பாஸ்கின் டிசோசா, தன் தந்தை ரவி, தாய் ராஜாத்தி, சகோதரர் சரண்குமார் ஆகியோர் பெயரிலும் என அசையும், அசையா சொத்துக்களாக ரூ.2 கோடியே 29 லட்சத்து 8531 இருப்பதாகவும், கடனாக ரூ.1 கோடியே 58 லட்சத்து 77 ஆயிரத்து 119 இருப்பதாகவும் வேட்புமனுவின்போது அளிக்கப்பட்ட பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.