

சுதந்திர தினத்தன்று பள்ளி நிகழ்ச்சிகளில் சினிமா பாடல்களுக்கு மாணவர்கள் நடனமாடியது சமூக ஆர்வலர்களை வேதனையடையச் செய்துள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்திலும் ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தின விழா நடந்தது. இதில் பெரும்பாலான பள்ளிகளில் தேசபக்தி பாடல்கள், அதையொட்டிய கலை நிகழ்ச்சிகள் தான் நடத்தப்பட்டன.
திரைப்பட பாடல்களில் கூட தேச பக்தி, ஒற்றுமையின் மேன்மை உள்ளிட்டவற்றை வலியுறுத்தும் பாடல்களை மட்டுமே தேர்வு செய்து அதற்கு நடனம் ஆட வைத்தனர்.
ஆனால், சில பள்ளிகளில் விழாவின் விறுவிறுப்பை அதிகரிக்கவும், சுவாரஸ்யம் கூட்டும் பொதுவான திரைப்பட பாடல்களுக்கும் மாணவ, மாணவியரை நடனம் ஆட வைத்துள்ளனர். இது சமூக ஆர்வலர்களை வேதனை அடையச் செய்துள்ளது.
இதுபற்றி சமூக ஆர்வலர்கள் சிலர் கூறும்போது, ‘பெரும்பாலான பள்ளிகள் ஆண்டு விழா உள்ளிட்ட தனிப்பட்ட விழாக்களில் கூட திரைப்பட பாடல்களை அனுமதிக்கக் கூடாது என்ற உறுதியுடன் உள்ளனர். ஆனால் ஒருசில பள்ளிகளில் மட்டும் குத்துப் பாட்டு, டப்பாங்குத்து உள்ளிட்ட பொதுவான சினிமா பாடல்களுக்கும் குழந்தைகள் நடனம் ஆட அனுமதிக்கின்றனர்.
சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற நாட்களில் சினிமா பாடல்களுக்கு நடனம் ஆட அனுமதிக்கக் கூடாது. திரைப்படங்கள் பெரும்பாலும் யதார்த்தத்தை மீறியவை. அந்த கலாச்சாரமும், சினிமாவின் தாக்கமும் பள்ளிக் குழந்தைகளில் மனதில் படிந்தால் அவர்களின் வளர்ச்சிக்கு அது தடையாக அமையும். எனவே, எதிர்காலத்திலாவது இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாத வகையில் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’என்றனர்.