

கோவை: கோவை மக்களவை தொகுதியில் போட்டியிடும் அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர். அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் மக்களவை தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் கட்சி தலைமையின் உத்தரவின்படி நேற்று ஒரே நாளில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
கோவை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் சிங்கை ஜி.ராமச்சந்திரன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் கிராந்திகுமார் பாடியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். முன்னாள் அமைச்சர் வேலுமணி, எம்எல்ஏ அம்மன் கே.அர்ச்சுணன், தேமுதிக மாநகர் மாவட்ட செயலாளர் சந்துரு, எஸ்டிபிஐ மாநில செயலாளர் ராஜா உசேன் ஆகியோர் உடனிருந்தனர்.
மாற்று வேட்பாளராக அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவின் மண்டல செயலாளர் விக்னேஷ் மனு தாக்கல் செய்தார். முன்னதாக, அதிமுக கோவை மாவட்ட அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில் இருந்து வேட்பாளர் சிங்கை ஜி.ராமச்சந்திரன் தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் ஊர்வலமாக சென்றார். தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கோவையில் அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். ‘விஷன் 2030' என்ற வகையில் கோவையை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லவும், மக்களின் தேவைகளையும், குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் விதத்திலும் திட்டங்களை வழங்க உள்ளோம்.
அனைத்து இயற்கை வளங்களையும் கொண்ட கோவை, உயர்கல்விக்கான மையமாகவும் உள்ளது. பாஜக ஆட்சியில் கொண்டு வந்த ஜிஎஸ்டி மற்றும் திமுக கொண்டு வந்த மின் கட்டண உயர்வு காரணமாக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில், ஜவுளித் துறையினர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றை சரி செய்து கோவையை அடுத்த கட்டத்துக்கு அதிமுக கொண்டு செல்லும். இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல், கோவை மக்களவை தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். முன்னதாக, நாம் தமிழர் கட்சியின் மண்டல தலைவர் அப்துல் வஹாப் மற்றும் கட்சியினர் வாகனங்களில் ஊர்வலமாக வந்தனர். போலீஸார் ஊர்வலத்திற்கு தடை விதித்து தேர்தல் விதிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தியதால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
சொத்து விவரம்: அதிமுக வேட்பாளர் சிங்கை ஜி.ராமச்சந்திரன் அசையும் சொத்து தனது பெயரில் ரூ.1 கோடியே 14 லட்சத்து 9,023, மனைவி ஸ்ருதி பெயரில் ரூ.1 கோடியே 2 லட்சத்து 65,320 மதிப்பிலும், அசையா சொத்துக்கள் முறையே ரூ.12 லட்சத்து 58 ஆயிரம் மற்றும் ரூ.20 லட்சத்து 100 மதிப்பிலும் இருப்பதாக வேட்புமனுவில் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கலாமணி தனது பெயரில் அசையும் சொத்துக்கள் ரூ.47 லட்சத்து 49,024 மதிப்பிலும், கணவர் ஜெகநாதன் பெயரில் ரூ.34 லட்சத்து 14,830 மதிப்பிலும் இருப்பதாகவும், அசையா சொத்துக்கள் எதுவும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.