

பாமக நிறுவனர் ராமதாஸ், திண்டிவனம் அருகே கோவடி கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோயில் எதிரே நேற்று முன்தினம் இரவு தனது பிரச்சாரத்தை தொடங்கினார். விழுப்புரம் மக்களவைத் தொகுதி பாமக வேட்பாளர் முரளி சங்கரை ஆதரித்து அவர் பேசியது: கடந்த காலங்களில் நேரு, இந்திரா காந்தி ஆகியோர் 400 இடங்களில் வெற்றி பெற்றதுபோல, நரேந்திர மோடியும் வெற்றி பெற்று, 3-வது முறையாக பிரதமராக பொறுப்பேற்பது உறுதி. அவ்வாறு அவர் பிரதமராக வந்ததும், கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்பதை முதன்மையான கோரிக்கையாக வலியுறுத்துவேன்.
‘அனைவருக்கும் நல்ல வீடு, படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு, பெண்களுக்கு பாதுகாப்பு’ என்பதுதான் பாமகவின் குறிக்கோள். கல்வியில் பின்தங்கி, குடிசைகள் நிறைந்த மாவட்டமாக உள்ள விழுப்புரம் வளர்ச்சியடைய வேண்டும்.
குடியரசுத் தலைவருக்கு கிடைக்கும் மருத்துவ வசதி ஏழை குடிமகனுக்கும் கிடைக்க வேண்டும். அனைவருக்குமான மருத்துவச் செலவை அரசே ஏற்க வேண்டும். நீர்நிலைகள் தூர்வாரப்பட்டு, விவசாயிகள் நலன் காக்கப்பட வேண்டும்.
நாட்டின் வளர்ச்சியை குடிப்பழக்கம் கெடுத்துக் கொண்டிருக்கிறது. கடவுள் என்னிடம் வந்து என்ன வரம் வேண்டும் என்று கேட்டால், மது இல்லாத நாடு வேண்டும் என்பதையே வரமாகவே கேட்பேன். நாட்டின் வளர்ச்சியை தீர்மானிக்கிற சக்தி பெண்களிடம் உள்ளது.
அனைத்து துறைகளிலும் பெண்கள் தடம் பதித்து வருகின்றனர். ஆண்களுக்கு சக்தியை வழங்க கூடியவர்கள் பெண்களாகவே உள்ளனர் என்றார். தொடர்ந்து கிராம மக்கள் இணைந்து, பாமகவுக்கு வழங்கிய ரூ.1 லட்சம் தேர்தல் நிதியை ராமதாஸ் பெற்றுக் கொண்டார்.