

தஞ்சாவூர்: சோழர்களின் நீர் மேலாண்மை உலகுக்கே எடுத்துக்காட்டாய் திகழ்கிறது என தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் வி.திருவள்ளுவன் பெருமிதம் தெரிவித்தார்.
ஓய்வு பெற்ற வேளாண் அலுவலர் வ.பழனியப்பன் எழுதிய ‘நீர் மேலாண்மை அன்றும்- இன்றும்’என்ற நூல் வெளியீட்டு விழாதஞ்சாவூரில் நேற்று நடைபெற்றது. தமிழறிஞர் கு.வெ.பால சுப்பிரமணியன் தலைமை வகித்தார். தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர்பாபாஜி ராஜா போன்ஸ்லே, தஞ்சாவூர் தொழில் வர்த்தக சங்கத்தலைவர் பழ.மாறவர்மன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் வி.திருவள்ளுவன், நூலை வெளியிட்டு பேசியது: நீர் மேலாண்மையில் தமிழர்கள் சிறந்து விளங்கினர். குறிப்பாக, 2,000 ஆண்டுகளுக்கு முன்பு கரிகாலச் சோழனால் கட்டப்பட்ட கல்லணை, இன்றளவும் கம்பீரமாக நிற்பதே சான்று. இந்தத் தொழில்நுட்பத்தை பின்னர் ஆங்கிலேயர்கள் கண்டுபிடித்து, ஆந்திராவில் கோதாவரி ஆற்றின்குறுக்கே இதேபோன்ற கட்டமைப்பில் அணையைக் கட்டினர்.
சோழர்கள் ஆட்சிக் காலத்தில் நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, விவசாயம் செழித்து வளர்ந்தது. இது உலகுக்கே எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.
நூலாசிரியர் வ.பழனியப்பன் ஏற்புரை வழங்கினார்.