Published : 26 Mar 2024 05:24 AM
Last Updated : 26 Mar 2024 05:24 AM
கோவை: கடந்த இரண்டு நாட்களில் வெள்ளியங்கிரி மலை ஏறிய 3 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர்.
கோவையை அடுத்த பூண்டியில் மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியில் பிரசித்தி பெற்ற வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் உள்ளது. இதில் 7-வது மலை உச்சியில் சுயம்புலிங்கமாக காட்சிதரும் வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசிக்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.
இந்நிலையில், ஆந்திராவை் சேர்ந்த சுப்பாராவ் (68), சேலத்தைச் சேர்ந்த தியாகராஜன் (35)ஆகியோர் நேற்று முன்தினம் மலையேறியபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தனர். நேற்று தேனி மாவட்டத்தை சேர்ந்த பாண்டியன்(40) என்பவர் உயிரிழந்தார். வன ஊழியர்கள் மூவரின் உடல் களையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதுகுறித்து, போளுவாம்பட்டிவனச்சரக அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கடந்த ஒன்றரை மாதங்களில் வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர்களில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
மலைக்கு செல்லும் பக்தர்களில் இதய நோய் சம்பந்தப்பட்டவர்கள், மூச்சுச் திணறல் உள்ளவர்கள், உடல்பருமனாக உள்ளவர்கள், சர்க்கரை நோய் உள்ளவர்கள், வயதானவர்கள், உடல்நிலை சரியில்லாதவர்கள், கரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருந்தவர்கள் அனைவரும் மருத்துவரை சந்தித்து முழு உடல் பரிசோதனை செய்தபின் மலை ஏற வேண்டும்.
மேலும், வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்கள் குழுவாக செல்ல வேண்டும். உயிரிழப்புகள் மற்றும் உடல்நலம் பாதிக்கப்படும் நபர்களை அடிவாரத்துக்கு கொண்டு வருவதுவனத்துறைக்கு கடும் சவாலாகஉள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT