Published : 26 Mar 2024 05:25 AM
Last Updated : 26 Mar 2024 05:25 AM
சென்னை: வட சென்னை மக்களவை தொகுதி வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கலின்போது அமைச்சர் சேகர்பாபு மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஒரே நேரத்தில் வந்து தேர்தல் அதிகாரியிடம் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், நல்ல நேரத்துக்குள் வேட்பு மனுத் தாக்கல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
நடைபெற உள்ள மக்களவை தேர்தலை முன்னிட்டு, நேற்று பவுர்ணமி தினம் புதன் ஹோரையில் (மதியம் 12 மணி முதல் 1 மணி வரை) வேட்பு மனுத் தாக்கல் செய்ய வேட்பாளர்கள் ஆர்வம் செலுத்தினர்.
அதன்படி, வடசென்னை தொகுதியில் போட்டியிடும் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.
தேர்தல் நடத்தும் அதிகாரி கட்டா ரவி தேஜாவிடம் வேட்புமனு தாக்கல் செய்ய அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ முதலாவதாகவும், இரண்டாவதாக திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியும் வந்தனர். அவர்கள் இருவரும் ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய தேர்தல் அலுவலர் அறைக்குச் சென்றனர்.
இதையடுத்து, யார் முதலில் வேட்புமனு தாக்கல் செய்வது என திமுக வேட்பாளருடன் வந்த அமைச்சர் சேகர்பாபு மற்றும் அதிமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
திமுக வேட்பாளருக்கு 2-ம் எண்டோக்கனும், அதிமுக வேட்பாளருக்கு 7-ம் எண் டோக்கனும் வழங்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
தேர்தல் அலுவலரிடம் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி முதலில் தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்ய முயன்றார். அதற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து, டோக்கன் வரிசைப்படி வேட்புமனுவை பெற வேண்டும் என தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் அமைச்சர் சேகர்பாபு வலியுறுத்தினார். ஆனால், யார் முதலில் வந்தார்களோ அவர்களை முதலில் வேட்புமனு தாக்கல்செய்ய அனுமதிக்க வேண்டும் என ஜெயக்குமார் வலியுறுத்தினார்.
இதனால், இரு தரப்புக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் 1 மணி நேரம் வேட்புமனுத் தாக்கல் செய்யும் பணி தடைபட்டது. இதன்பின் வருகைப் பதிவேடு பரிசோதிக்கப்பட்டு அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ முதலில் வந்தது உறுதி செய்யப்பட்டது. அவரையே முதலில்வேட்புமனு தாக்கல்செய்ய அனுமதித்தார்.
இதற்கிடையே, அச்சமயத்தில் பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் வேட்புமனுத் தாக்கல் செய்ய வந்தார். அவர் ஒரு மணி நேரத்துக்கும் மேல் அங்கு காத்திருந்ததால் கோபமடைந்து திமுக, அதிமுகமற்றும் தேர்தல் அதிகாரிக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
இதனிடையே, அலுவலகத்துக்கு வெளியே தொண்டர்கள் கூடி கோஷம் எழுப்பினர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, “தேர்தல் நெருங்க நெருங்க தோல்வி பயத்தால், அதிமுகவினர் இப்படிப்பட்ட அராஜகங்களை கட்டவிழ்த்து விடுவார்கள். எதிரிகள் திட்டமிட்டு கலவரங்களை ஏற்படுத்தக்கூடும். எனவே, தேர்தலை அமைதியாக நடத்துமாறு தேர்தல் அலுவலரிடம் நாங்கள் முறையிட்டோம்” என்றார்.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘தேர்தல் நடத்தும் அதிகாரி நாங்கள் முதலில் வந்ததால் முதலில் எங்கள் வேட்பு மனுவை பெற முயன்றார். ஆனால் அதை திமுக ஏற்கவில்லை.அதிகாரிகளை மிரட்டுவது, கொச்சையாக பேசுவது திமுகவின் வழக்கமான செயல்பாடுகளில் ஒன்று’’ என்றார்.
வேட்புமனு தாக்கல் செய்த பிறகு திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘‘வேட்பு மனு தாக்கலின்போது அதிமுகவுக்கும், திமுகவுக்கும் சில குளறுபடிகள் இருந்தது. எனினும், நியாயமாகத்தான் இந்த வேட்பு மனு தாக்கல் செய்திருக்கிறோம்’’ என்றார்.
பாஜக வேட்பாளர்: வேட்புமனு தாக்கல் செய்த பாஜக வேட்பாளர் பால்.கனகராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘வேட்பு மனு தாக்கல் செய்ய மதியம் 12 மணிக்கு வந்தோம்.பொதுவாக வேட்பு மனு தாக்கல் செய்ய 10 நிமிடம் தான் ஆகும். ஆனால், 3 மூன்று மணி நேரம் காலதாமதம் ஏற்பட்டது.
இதற்கு காரணம் திமுக அமைச்சர் சேகர்பாபு மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆகிய இருவரும் நாடகத்தை அரங்கேற்றி உள்ளனர். இந்த சம்பவம் குறித்து தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்க உள்ளோம்’’ என்றார். இதற்கிடையே, இப்பிரச்சினை தொடர்பாக, அதிமுக சார்பில் தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நடத்தை விதிமீறல் - மத்திய சென்னை பாஜக வேட்பாளர் மீது போலீஸார் வழக்குப் பதிவு
தேர்தல் விதிமுறை மீறலில் ஈடுபட்டதாக மத்திய சென்னை பாஜக வேட்பாளர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: மக்களவைத் தேர்தலில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. இதில் தேர்தல் விதிமுறைகளை மீறுவோர் மீது தேர்தல் ஆணையம் அளிக்கும் புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை செய்கின்றனர்.
புளியந்தோப்பு பட்டாளத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தேர்தல் ஆணையத்தின் அனுமதியின்றி பாஜ கட்சியினர் நேற்று முன்தினம் பிரச்சாரம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த பிரச்சார நிகழ்ச்சியில் அந்த கட்சியின் மத்திய சென்னை வேட்பாளர் வினோஜ் பி.செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இது தொடர்பாக திரு.வி.க நகர் சட்டப்பேரவை தொகுதி தேர்தல் ஆணைய அதிகாரி புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் ஆணைய விதிமுறைகளை மீறியதாக வினோஜ் பி.செல்வம், அந்த அடுக்குமாடி குடியிருப்பு சங்கத் தலைவர் லலித் பாந்தா முத்தா ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT