Published : 26 Mar 2024 06:04 AM
Last Updated : 26 Mar 2024 06:04 AM
சென்னை: சென்னை மெட்ரோ ரயில் முதல்கட்டம் நீட்டிப்பு திட்டத்தில் உள்ள மண்ணடி உள்பட 12 மெட்ரோ ரயில் நிலையங்கள், பார்க்கிங் பகுதிகளில் சூரிய மின்சக்தி சாதனங்களை நிறுவ சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மொத்தம் 2,715 கிலோவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட உள்ளது.
கார்பன் வெளியேற்றத்தை குறைத்தல், பசுமையைக் காத்தல், பாதுகாப்பான மின் ஆற்றலை பெறுதல் உள்ளிட்ட நோக்கத்துக்காக சூரிய மின்சக்தி திட்டத்துக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஆரம்பம் முதலே ஊக்கம் அளித்து வருகிறது. அந்த வகையில், முதல் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் பல்வேறு இடங்களின் மேற்கூரைகளில் சூரிய மின்சக்தி சாதனங்களை நிறுவியது.
குறிப்பாக, கோயம்பேடு மெட்ரோ ரயில் தலைமையகம், மெட்ரோ ரயில் உயர்மட்ட பாதையில் அமைக்கப்பட்ட நிலையங்கள், பணிமனைகளின் மேற்கூரைகளில் சூரிய மின் உற்பத்தி சாதனங்களை நிறுவி, மின் உற்பத்தி செய்யப்படுகிறது. 6.5 மெகாவாட் அளவுக்கு மேல் சூரிய மின்சக்தி சாதனங்களைப் பொருத்தி, மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
இதன்மூலமாக, நாள் ஒன்றுக்கு சரரியாக 29 ஆயிரம் கிலோ வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால், ஆண்டுக்கு ரூ.2 கோடிக்கு மேல்மின்சார கட்டணம் செலவு சேமிக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து, இரண்டாம்கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் சூரிய ஒளி மின் சாதனம் நிறுவி மின்சாரம் உற்பத்தி செய்ய முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை மெட்ரோ ரயில் முதல்கட்டம், முதல்கட்டம் நீட்டிப்பில் உள்ள 12 மெட்ரோ ரயில் நிலையங்கள், பார்க்கிங் பகுதிகளில் திறந்தவெளியில் உள்ள உயர்மட்டபகுதியில் சூரியமின்சக்தி சாதனங்களை நிறுவ மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
பச்சை வழித்தடத்தில்.. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நீல வழித்தடத்தில் விம்கோநகர், மண்ணடி, உயர்நீதிமன்றம், அரசினர்தோட்டம், சைதாப்பேட்டை, நங்கநல்லூர் ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களில் உயர்மட்ட பகுதிகள், பார்க்கிங் பகுதிகளில் திறந்தவெளியில் சூரியஒளி மின்சாதனங்கள் நிறுவப்பட உள்ளன.
இதுதவிர, பச்சை வழித்தடத்தில் எழும்பூர், ஷெனாய் நகர், அண்ணாநகர் கிழக்கு, திருமங்கலம், கோயம்பேடு ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களில் சூரிய ஒளி மின்சாதனங்கள் நிறுவப்பட உள்ளன. மொத்தம் 2,715கிலோவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட உள்ளது. சைதாப்பேட்டையில் மட்டும் தரைமட்டத்தில் 120 கிலோவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய சூரிய ஒளி சாதனம் நிறுவப்பட உள்ளது.
ஒப்பந்தப்புள்ளி: இந்த 12 மெட்ரோ ரயில் நிலையங்களில் ஒப்பந்தம் ஒதுக்கீடு மற்றும் நிறுவல் செலவு ஆகியவற்றை மெட்ரோ ரயில் நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை. இன்னும் 3 மெகாவாட் நிறுவும் பணி நடைபெற்றுக்கொண்டிருப்பதைத் தவிர, ஏற்கெனவே மேற்கூரையில் 4.2 மெகாவாட்டுக்கு சூரிய ஒளிமின் உற்பத்தி சாதனம் நிறுவுவதற்கான ஒப்பந்தப்புள்ளி வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே தொடங்கப்பட்ட 6.4 மெகாவாட் மின் உற்பத்தி ஆலையில், மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு ஆண்டுக்கு 81.65 லட்சம்யூனிட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த ஆலை மூலம், மெட்ரோ ரயில் நிறுவனம் ஆண்டுக்கு ரூ. 2.3 கோடி சேமிக்கிறது. மின்சார செலவை மிச்சப்படுத்துவதோடு, ஒட்டுமொத்தமாக 13.6 மெகாவாட் சூரிய மின் உற்பத்தி ஆலை மூலமாக, 17,350 டன் கார்பன் வெளியேற்றத்தை குறைக்க முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT