

காஞ்சி/செங்கை/திருவள்ளூர்: காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் முக்கிய கட்சிகளைச் சேர்ந்தவர்கள் உட்பட பலர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
காஞ்சிபுரம் மக்களவைத் தனித் தொகுதிக்கு நேற்று மட்டும் 6 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.திமுக வேட்பாளர் க.செல்வம் ஊர்வலமாக வந்து மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அமைச்சர் தா.மோ.அன்பரசன், காஞ்சிபுரம் எம்எல்ஏ சி.வி.எம்.பி.எழிலரசன் உடன் இருந்தனர்.
அதிமுக வேட்பாளர் ராஜசேகர் ஊர்வலமாக வந்து மனு தாக்கல் செய்தார். மாவட்ட செயலர் வி.சோமசுந்தரம், மாநில அமைப்புச் செயலர் வாலாஜாபாத் பா.கணேசன் உட்பட பலர் உடன் இருந்தனர்.
பாமக வேட்பாளர் ஜோதி வெங்கடேசனும் ஊர்வலமாக வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார். இவருடன் பாமக நிர்வாகி திருகச்சூர் ஆறுமுகம், பாஜக மாவட்டத் தலைவர் பாபு மற்றும் கூட்டணிக் கட்சியினர் உடன் இருந்தனர்.
இதேபோல் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சந்தோஷ்குமார், பகுஜன் சமாஜ்கட்சி வேட்பாளர் இளையராஜா, சுயேட்சை வேட்பாளர் மணிபாலன் உட்பட 6 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதியில், தி.மு.க. வேட்பாளரும் தற்போதைய எம்.பி.யுமான டி.ஆர்.பாலு, அ.தி.மு.க. வேட்பாளர் மருத்துவர் ஞா.பிரேம்குமார், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் பிரபாகரன், நாம் தமிழர் வேட்பாளர் ரவிசந்திரன், அறவோர் முன்னேற்றக் கழகம் வேட்பாளர் சுதா வள்ளி ஆகியோர் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தேர்தல் அலுவலர் ச.அருண்ராஜிடம் நேற்று மனு தாக்கல் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் அதிமுக கூட்டணி சார்பில், தேமுதிக வேட்பாளரான, முன்னாள் எழும்பூர் எம்.எல்.ஏ. கு.நல்லதம்பி, மாவட்ட தேர்தல் அலுவலர் பிரபுசங்கரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். இந்த வேட்புமனு தாக்கலின்போது, தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ், திருவள்ளூர் மக்களவை தொகுதிக்கான அதிமுக தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களான, முன்னாள் எம்.பி. வேணுகோபால், முன்னாள் அமைச்சர்களான பி,வி.ரமணா, மாதவரம் மூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.
தொடர்ந்து, பாஜக வேட்பாளர் பொன். வி.பாலகணபதி வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிகழ்வின் போது, பாஜகவின் மத்திய அரசின் நலத்திட்டங்கள் பிரிவின் மாநில தலைவர் லோகநாதன், அமமுக திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் ஏழுமலை, பாமக மாநில துணை செயலாளர் கே.என்.சேகர், திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் வி.எம்.பிரகாஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.