Published : 26 Mar 2024 06:04 AM
Last Updated : 26 Mar 2024 06:04 AM
சென்னை: சென்னை மாவட்டத்தில் தேர்தல்பறக்கும் படை, நிலைக் கண்காணிப்பு குழுக்கள் மூலம் இதுவரை ரூ.5 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள், ரூ.59 லட்சம்ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையரும், சென்னைமாவட்ட தேர்தல் அலுவலருமான ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
விளம்பரங்கள் அகற்றம்: மக்களவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடந்த 16-ம் தேதிமுதல் அமலில் உள்ளது. சென்னைமாவட்டத்துக்கு உட்பட்ட 3 மக்களவைத் தொகுதிகளில் உள்ளடங்கிய 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி, பொது இடங்களிலிருந்த 63,482 சுவர் விளம்பரங்கள், 14,183 சுவரொட்டிகள், 602பதாகைகள் மற்றும் இதர வகையான 1,210 விளம்பரங்கள் அகற்றப்பட்டுள்ளன. தனியார் இடங்களில் இருந்த 5,635 சுவர் விளம்பரங்கள், 7,757 சுவரொட்டிகள்,609 பதாகைகள் மற்றும் இதர வகையான 1,033 விளம்பரங்கள் அகற்றப்பட்டன.
ஆவணம் இல்லாத பணம்: தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலைக் கண்காணிப்புக் குழுக்கள் மூலம் கடந்த 24-ம் தேதி மாலை 6 மணி முதல் நேற்று காலை 6 மணி வரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்குப் புறம்பாக முறையாக ஆவணம் இல்லாமல்,அண்ணா நகர் தொகுதியில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.81.400 ரொக்கம் தேர்தல் பறக்கும் படையால் பறிமுதல் செய்யப்பட்டது.
அதேபோல் விருகம்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் ரூ.65,500, தியாகராயநகர் சட்டப்பேரவைத் தொகுதியில் ரூ.3,09,000, வேளச்சேரி சட்டப்பேரவைத் தொகுதியில் 1,50,000 என மொத்தம் ரூ.5,24,500 கைப்பற்றப்பட்டு கருவூலங்களில் பற்று வைக்கப்பட்டுள்ளன.
சி-விஜில் செயலி: இதுவரை ரூ.59,13,350 ரொக்கம் மற்றும் ரூ.5,26,42,775 மதிப்பிலான 7,999 கிராம் தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்திய தேர்தல் ஆணையத்தால் தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பான புகார்களை அளிக்க உருவாக்கப்பட்ட C-Vigil என்னும் செல்போன் செயலி மூலம் இதுவரை 105 புகார் மனுக்கள் பெறப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் தேர்தல் தொடர்பான சந்தேகங்களை தீர்க்க உருவாக்கப்பட்ட மாவட்டதகவல் மையத்தில் இதுவரை 2,699 தொலைபேசி அழைப்புகள் பெறப்பட்டன. அனைத்துக்கும் முறையான பதில்கள் அளிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT