

தமிழகத்தில் பயிர்களுக்கு பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிகள் விஷமாக மாறி பலர் உயிரிழந்துள்ளதாக கூறப்படும் நிலையில் இதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழகத்தில் பெரம்பலூர், அரியலூர், சேலம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் விவசாயிகள் பயன்படுத்தி வரும் சில பூச்சிக்கொல்லிகள் காரணமாக பலருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும், சிலர் உயிரிழந்துள்ளதாகவும், உண்மை கண்டறியும் குழு நடத்திய ஆய்வில் தெரிய வந்தது. கடந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடந்த கள ஆய்வில், பூச்சிக்கொல்லி மருந்து விஷமாக மாறி, 500க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதுடன், 9 பேர் உயிரிழந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து, உண்மை கண்டறியும் குழுவில் இடம் பெற்றிருந்த வி.எம் பார்த்தசாரதி என்பவர், தேசிய மனித உரிமை ஆணையத்திடம் புகார் அளித்தார். பூச்சிக்கொல்லிகளால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க தமிழக அரசு தவறிவிட்டதாகவும், இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவிட வேண்டும் எனவும் கோரி இருந்தார். அதில், பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்து தகவல் திரட்டியதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் அவர் கோரி இருந்தார். இதுகுறித்து வி.எம். பார்த்தசாரதி கூறுகையில் ‘‘பாதிக்கப்பட்ட குடும்பங்களை கடந்த ஆண்டு நாங்கள் சந்தி்ததபோது, மிக மோசமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது எங்களுக்கு தெரிய வந்தது. தமிழகத்தில் பூச்சிக்கொல்லியால் ஏற்பட்டுள்ள பாதிப்பு மிக மோசமான அளவில் உள்ளது’’ எனக்கூறினார்.
இதுகுறித்து பியூசில் அமைப்பைச் சேர்ந்த சரவணன் கூறியதாவது:
‘‘மிக மோசமான பூச்சிக்கொல்லி மருந்துகளால் மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து தேசிய மனித உரிமை ஆணையம் எடுத்த நடவடிக்கை காரணமாக பஞ்சாப் மாநில அரசு மோனோகிரோட்டோபாஸ் உள்ளிட்ட 19 மிக மோசமான பூச்சிக் கொல்லிகளுக்கு தடை விதித்துள்ளது. இதுபோலேவே இந்த பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்துவதற்காக வழங்கப்பட்டிருந்த உரிமங்களையும் ரத்து செய்துள்ளது.
இந்தியாவில் அதிகஅளவு பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தி வரும் பஞ்சாப் மாநிலம் தற்போது, அவற்றை தடை செய்யப்பட்டவையாக அறிவித்துள்ளன. ஆனால், தமிழகத்தில் இந்த பூச்சிக்கொல்லி மருந்துகள் தங்கு தடையின்றி பயன்படுத்தப்படுகின்றன. இவற்றை தடுக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’’ எனக்கூறினார்.
மனித உரிமை ஆணையம் கடந்த மாதமே நோட்டீஸ் அனுப்பியுள்ளபோதிலும், இதுதொடர்பாக தமிழக அரசு பதில் ஏதும் அனுப்பவில்லை என தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து தமிழக விவசாயத்துறை இயக்குனர் தட்சிணாமூர்த்தியை தொடர்பு கொண்டு தி இந்து (ஆங்கிலம்) சார்பில் கேட்டோம். அதற்கு, ‘‘தேசிய மனித உரிமை ஆணையம் அளித்துள்ள நோட்டீஸ் குறித்து தெரியாது. எனினும், இதுதொடர்பாக உடனடியாக எங்கள் துறையின் கூட்டத்தை விரைவில் கூட்டி நடவடிக்கை எடுப்போம்.
மரணம் நிகழ்ந்ததாக கூறப்படும் விவகாரம் தொடர்பாகவும், தடுப்பதற்கான நடவடிக்கை குறித்தும் ஆலோசனை செய்வோம். பூச்சிக்கொல்லி விற்பனையாளர்களுக்கும் இதுதொடர்பாக விரிவான ஆலோசனைகள் வழங்கப்படும். பாதிப்பை ஏற்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்துகளை விவசாயிகளுக்கு விற்பனை செய்ய வேண்டாம் என கேட்டுக்கொள்வோம்’’ என்றார்.
மனிதர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படும் என உலக சுகாதார அமைப்பு பட்டியலிட்டுள்ள முதல் வகை பூச்சிக் கொல்லி மருந்துகளுக்கு, பஞ்சாபை போல தடை விதிக்கப்படுமா? என்ற கேள்விக்கு, ‘‘இதுபற்றி ஆலோசித்து நடவடிக்கை எடுப்போம்’’ என்றார்.