

சென்னை: மத்திய அரசின் சூரியசக்தி திட்டத்தின்கீழ் வீடுகளின் மேற்கூரையில் உற்பத்தியாகும் மின்சாரத்தை கணக்கிட 8,000 இருவழி மீட்டர்கள் வாங்க தமிழக மின்வாரியம் முடிவு செய்துள்ளது.
வீடுகளின் மேற்கூரையில் சூரியசக்தி மின்நிலையம் அமைக்கும் ‘பிரதமரின் சூரிய வீடு: இலவச மின்சாரம்’ திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இத்திட்டத்தின்கீழ், ஒரு கிலோவாட் திறனில் சூரியசக்தி மின்நிலையம் அமைக்க ரூ.30 ஆயிரமும், 2 கிலோவாட்டுக்கு ரூ.60 ஆயிரமும், அதற்கு மேல் ரூ.78 ஆயிரமும் மானியம் வழங்கப்படுகிறது.
இவ்வாறு வீட்டில் அமைக்கும் சூரியசக்தி மின்நிலையத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தை உரிமையாளர்கள் பயன்படுத்தியது போக, மீதமுள்ள மின்சாரத்தை மின்வாரியத்துக்கு விற்பனை செய்யலாம். இதனால், மின்கட்டண செலவு குறையும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் pmsuryaghar.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின்கீழ், தமிழகத்தில் அடுத்த ஓராண்டுக்குள் 25 லட்சம் வீடுகளுக்கு மின்இணைப்பு வழங்க மின்வாரிய அதிகாரிகள் இலக்கு நிர்ணயித்துள்ளனர்.
இந்நிலையில், இத்திட்டத்தில் விண்ணப்பிப்பவர்களுக்கு அவர்களது மின்இணைப்பில் மின்வாரியம் சார்பில் ‘பை-டைரக் ஷனல்’ (இரு வழி) மீட்டர் பொருத்தப்பட உள்ளது. இதற்காக, முதல்கட்டமாக 8,000 மீட்டர்கள் வாங்கப்பட உள்ளன.
வீட்டில் உற்பத்தி செய்யப்பட்ட சூரியசக்தி மின்சாரத்தின் அளவு, உரிமையாளர் பயன்படுத்தியது, அதுபோக மின்வாரியத்துக்கு வழங்கப்பட்ட மின்சாரம் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இந்த இருவழி மீட்டரில் துல்லியமாக பதிவாகும் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
சூரிய மின் உற்பத்தி அதிகரிப்பு: தமிழகத்தில் ஆண்டுக்கு 300 நாட்கள் சூரிய வெளிச்சம் கிடைப்பதால், சூரியசக்தி மின் உற்பத்தி செய்வதற்கு ஏற்ற சாதகமான சூழல் நிலவுகிறது. இதனால், சூரியசக்தி மின் உற்பத்தி செய்ய தனியார் நிறுவனங்கள் அதிக அளவில் ஆர்வம் செலுத்துகின்றன. மேலும், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளில் சூரியசக்தி மின் உற்பத்தி செய்ய மத்திய, மாநில அரசுகள் மானியம் வழங்கி வருகின்றன.
தற்போது தமிழகத்தில் தனியார் ஆலைகள் மூலம் 6,977 மெகாவாட்டும் வீடுகள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள், மருத்துவமனைகள், கல்லூரிகள் உள்ளிட்ட கட்டிடங்களின் மீது மேற்கூரை சூரியசக்தி மூலம் 449 மெகாவாட்டும் என மொத்தம் 7,426 மெகாவாட் அளவுக்கு சூரியசக்தி மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. தினசரி சூரியசக்தி மின் உற்பத்தி 3 ஆயிரம் முதல் 3,500 மெகாவாட் என்ற அளவில் இருக்கும்.
இந்நிலையில், கோடைக்காலம் தொடங்கியுள்ளதால் தினசரி மின் உற்பத்தி 5 ஆயிரம் மெகாவாட்டை தாண்டி உள்ளது. இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
சூரியசக்தி மின் உற்பத்திக்கு வெப்பத்தைவிட சூரிய வெளிச்சம்தான் தேவைப்படுகிறது. தற்போது கோடைக்காலம் தொடங்கி உள்ளதால், காலை 6 முதல் மாலை 6 மணி வரை அதிக அளவில் சூரிய வெளிச்சம் கிடைக்கிறது.
இதனால், சூரியசக்தி மின் உற்பத்தியும் அதிகமாக நடைபெறுகிறது. அதன்படி, தினசரி 5,100 முதல் 5,300 மெகாவாட் வரை மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால், கோடையில் மின்தேவையை எளிதில் பூர்த்தி செய்ய முடியும்.இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
வைப்பு தொகை வட்டி உயர்வு: தமிழ்நாடு மின்வாரியம் மின்இணைப்பு வழங்கும்போது நுகர்வோரிடம் இருந்து குறிப்பிட்டத் தொகையை வைப்புத் தொகையாக வசூலிக்கப்பட்டு வருகிறது. இதற்கு மின்வாரியம் வட்டி வழங்குகிறது. இதன்படி, நுகர்வோரிடம் வசூலித்துள்ள வைப்பு தொகைக்கு 2023-24ம் நிதியாண்டுக்கு 6.75 சதவீதம் வட்டி வழங்குமாறு மின்வாரியத்துக்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இது முந்தைய நிதியாண்டில் 5.70 சதவீதமாக இருந்தது. இந்த நிதியாண்டில் பெரிய தொழிற்சாலைகளிடம் வசூலித்து உள்ள மீட்டர் வைப்புத் தொகைக்கு 6.75 சதவீதம் வட்டி வழங்குமாறும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.