அம்மை, பொன்னுக்கு வீங்கி நோய்கள் பாதிப்புக்கு 4 லட்சம் வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் இருப்பு

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: சின்னம்மை, தட்டம்மை, பொன்னுக்கு வீங்கி பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்க 3.81 லட்சத்துக்கும் அதிகமான வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் தயார் நிலையில் உள்ளன என்று பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்தார்.

கோடைகாலம் தொடங்கியுள்ளதால் வேரிசல்லா என்னும் வைரஸ் மூலம் சின்னம்மை நோய் பரவி வருகிறது. அசுத்தமான சூழலுக்கு நடுவே வசிப்பவர்களுக்கும், நோய் எதிர்ப்பாற்றல் குறைவாக இருப்பவர்களுக்கும் சின்னம்மை பரவுகிறது. அவர்களின் எச்சில் மூலம் பிறருக்கும் பரவக்கூடும்.

அதனை தொடக்கத்தில் கவனித்து சிகிச்சை பெறாவிட்டால் நிமோனியா, மூளைக் காய்ச்சல், சிறுநீரக அழற்சி போன்ற தீவிர பாதிப்புகள் ஏற்படக்கூடும். கோடைகாலத்தில் சின்னம்மை மட்டுமின்றி மம்ப்ஸ் எனப்படும் வைரஸ் மூலம் பரவும் பொன்னுக்கு வீங்கி நோய், தட்டம்மை போன்றவைகளால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கான தடுப்பு நடவடிக்கைகளை பொதுசுகாதாரத் துறை எடுத்து வருகிறது.

இதுதொடர்பாக தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் தட்டம்மை, சின்னம்மை பாதிப்புகள் அதிகரிப்பது வழக்கமான ஒன்றுதான். அதனைக் கட்டுப்படுத்தும் விதமாக அனைத்து மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் 3.81 லட்சம் எண்ணிக்கையில் வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

இதைத்தவிர, காய்ச்சலுக்கு வழங்கப்படும் பாராசிட்டமால் மாத்திரைகளும் தேவையான அளவு உள்ளன. மேலும், ஓஆர்எஸ் உப்பு - சர்க்கரை கரைசல், கிருமித் தொற்றுக்கான அசித்ரோமைசின் மாத்திரைகள் ஆகியவை அடுத்த 3 மாதங்களுக்குத் தேவையான அளவு இருப்பில் இருக்கின்றன.

பாதிப்பு அதிகமுள்ள இடங்களில் நடமாடும் மருத்துவக் குழுக்கள் அனுப்பி வைக்கப்படும். ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு அம்மை பரவாமல் தடுப்பது எப்படி என்பது குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சின்னம்மை அறிகுறிகள்: உடலில் நீர் கட்டியைப்போன்ற சிறிய கொப்பளங்கள் தோன்றும். பின்னர் அவை கொஞ்சம் பெரிதாகி நீர் கோர்த்துக் காணப்படும். கொப்பளங்களில் இருந்து நீர் வடியும். பின்னர் நீர் வறண்டு கொப்பளங்கள் உதிரும். இந்த நோய் குழந்தைகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கும், முதியவர்களுக்கும் எளிதில் பரவும்.

பொன்னுக்கு வீங்கி அறிகுறிகள்: காது மடலுக்கு கீழ் உள்ள உமிழ் நீர் சுரப்பியை வைரஸ் தொற்று தாக்குவதால், தாடையின் இருபுறமும் வீக்கம் தோன்றுகிறது. காய்ச்சல், கழுத்துவலி, தலைவலி, பசியின்மை, பலவீனம், சாப்பிடும் போதோ அல்லது விழுங்கும் போதோ வலி ஏற்படுதல்.

தட்டம்மை அறிகுறிகள்: இந்நோய்க்கு மணல்வாரி அம்மை என்ற மற்றொரு பெயரும் உண்டு. காய்ச்சல், இருமல், மூக்கில் நீர் ஒழுகுதல், கண்ணில் நீர்வடிதல் அதன் அறிகுறிகளாகும். முகம் மற்றும் காதின் பின்பகுதிகளில் வியர்க்குரு போன்ற அறிகுறிகள் தோன்றி சிவப்பு புள்ளிகளாக உடல் முழுவதும் பரவி காணப்படும். கண்கள் சிவந்து வீக்கமாக இருக்கும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in