Published : 25 Mar 2024 06:42 AM
Last Updated : 25 Mar 2024 06:42 AM

பிரதமர் மோடி குறித்து அவதூறு பேச்சு: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்கு

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் | கோப்புப்படம்

தூத்துக்குடி/சென்னை: தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சார்பில், இண்டியா கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம் கடந்த 22-ம் தேதி இரவு உடன்குடி அருகேயுள்ள தண்டுபத்து கிராமத்தில் நடைபெற்றது.

திமுக வேட்பாளர் கனிமொழி பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் தலைமை வகித்துப் பேசிய தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடிகுறித்து அவதூறாக விமர்சித்ததாகக் கூறப்படுகிறது. அவர் பேசியவீடியோ காட்சி சமூக வலைதளங் களில் வேகமாகப் பரவியது.

தேர்தல் அலுவலரிடம்... இது தொடர்பாக பாஜக தூத்துக்குடி தெற்கு மாவட்டத் தலைவர் ஆர்.சித்ராங்கதன், மாவட்ட தேர்தல் அலுவலரான ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார். மேலும், புகார் மனுவின் நகல்களை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, இந்திய தேர்தல் ஆணையருக்கும் அனுப்பிவைத்தார்.

அந்த மனுவில், "இண்டியா கூட்டணி செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடியை அருவருக்கத்தக்க, இழிவான, அசிங்கமான சொற்களால் விமர்சித்துள்ளது பெரும் அதிர்ச்சியைஅளிக்கிறது. இழிவான வார்த்தைகளால் எதிர்க்கட்சியினரை விமர்சிப்பது, தேர்தல் விதிமுறைகளின்படி குற்றமாகும்.

எனவே, அமைச்சர் உள்ளிட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தியிருந்தார்.

டிஜிபி-யிடம் புகார்: இதற்கிடையில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன், மாநிலச் செயலாளர் கராத்தே தியாகராஜன், மத்திய சென்னை கிழக்கு மாவட்டத் தலைவர் விஜய் ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் தலைமை தேர்தல் அதிகாரியிடமும், டிஜிபி அலுவலகத்திலும் புகார் கடிதம் அளித்துள் ளனர்.

இது தொடர்பாக கரு.நாகராஜன் செய்தியாளர்களிடம் கூறும்போது, "கனிமொழி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் முன்னிலையில், பிரதமர்மோடியை அவதூறாகப் பேசியுள்ளார் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன். இதை பாஜக வன்மையாகக் கண்டிக்கிறது. தமிழக முதல்வர் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அமலாக்கத் துறையினர் அனிதாராதாகிருஷ்ணனின் வழக்கை விசாரித்து வருகின்றனர். செந்தில் பாலாஜி, பொன்முடிக்கு வந்தநிலை, அனிதா ராதாகிருஷ்ணனுக் கும் விரைவில் வரும். இந்தவிவகாரம் தொடர்பாக நீதிமன்றத் தையும் நாட இருக்கிறோம்" என்றார்.

அண்ணாமலை கண்டனம்: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில், "பிரதமர் மோடிக்கு எதிராக அவதூறான கருத்துகளையும், மன்னிக்க முடியாத பேச்சுகளையும் பேசிய திமுக தலைவர்கள், தங்களின் நேர்மையற்ற நடத்தையில் இன்னும் தாழ்வு நிலையைஅடைந்துள்ளனர். குறை சொல்லஅவர்களிடம் எதுவும் இல்லாதபோது, ​​இப்படிப் பேசுவதுதான் திமுக தலைவர்களின் வழக்கம். மேடையில் இருந்த திமுக எம்.பி. கனிமொழி, தன் சக கட்சிக்காரரை தடுக்கவில்லை" என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பிரதமர் குறித்துஅமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவதூறாகப் பேசியதாக பாஜக மாவட்டத் தலைவர் சித்ராங்கதன் மெஞ்ஞானபுரம் காவல்நிலையத்தில் அளித்த புகாரின்அடிப்படையில், அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x