Published : 13 Feb 2018 07:59 PM
Last Updated : 13 Feb 2018 07:59 PM

குன்றத்தூரில் கணவன் கண் எதிரில் நகை பறித்து சென்ற இளைஞர்: பாண்டிச்சேரியில் கைது, கூட்டாளி தலைமறைவு

குன்றத்தூரில் பெண்ணிடம் நகை பறித்து தப்பிச்சென்ற இளைஞர் கண்காணிப்பு கேமரா மூலம் அடையாளம் காணப்பட்டு பிடிபட்டார். தலைமறைவாக இருக்கும் கூட்டாளியை போலீஸார் தேடி வருகின்றனர்.

பூந்தமல்லி, குன்றத்தூரை அடுத்த ராகவேந்திரா நகர், கம்பர் தெருவைச் சேர்ந்தவர் அசோக்குமார்(63). இவரது மனைவி ஜெயஸ்ரீ (57). கடந்த சனிக்கிழமை கணவன்- மனைவி இருவரும் அருகில் உள்ள கடைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.

இவர்களை வெகு நேரமாக மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள் நோட்டமிட்டு வந்தனர். அதில் ஒருவன் கீழே இறங்கி ஜெயஸ்ரீ பின் புறம் வந்து அவர் கழுத்திலிருந்த நகையை பறிக்க முயல இதனால் நிலைகுலைந்து போன ஜெயஸ்ரீ சாலையில் விழுந்தார்..

அதிர்ச்சி அடைந்த அசோக்குமார், கொள்ளையனை விரட்டிச் சென்றார். ஆனால் அவன், சிறிது தூரத்தில் மோட்டார் சைக்கிளில் தயாராக இருந்த கூட்டாளியுடன் தப்பி சென்றான். கொள்ளையனை பிடிக்கும் முயற்சியில் அசோக்குமாரும் கீழே விழுந்து காயமடைந்தார்.

செயின் பறிப்பு காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமிராக்களில் பதிவாகி இருந்தது. இது பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து குன்றத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கேமிரா காட்சிகளை வைத்து ஆய்வு செய்தபோது நகை பறிப்பில் ஈடுபட்டது பல்லாவரத்தை அடுத்த பொழிச்சலூர், பகுதியை சேர்ந்த சிவா (19) என்பது தெரியவந்தது. மோட்டார் சைக்கிளை ஓட்டியது அவனது கூட்டாளி அதே பகுதியைச் சேர்ந்த சாலமன் (23) என்பது தெரிய வந்தது.

நகை பறிப்பில் ஈடுபட்ட காட்சி ஊடகங்களில் வெளியானதை எதிர்ப்பார்காத இருவரும் பயந்து போய் பாண்டிச்சேரி வில்லியனூரில் தலைமறைவாக இருந்தனர். இதையடுத்து தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று சிவாவை கைது செய்தனர். போலீசார் வருவதை அறிந்த சாலமன் தப்பி ஓடி விட்டார்.

பிடிபட்ட சிவாவிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் கடந்த 2016-ம் ஆண்டு அண்ணாசாலை போலீஸ் நிலையத்தில் 2 நகை பறிப்பு வழக்குகளில் சம்பந்தப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது. சிவாவும், சாலமனும் சிட்லபாக்கம், தாம்பரம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் தொடர்ந்து நகை பறிப்பில் ஈடுபட்டு அதில் வரும் பணத்தை வைத்து ஜாலியாக செலவு செய்து வந்துள்ளனர்.

கடந்த 10-ம் தேதி சம்பவத்தில் அந்த இடத்தில் கண்காணிப்பு கேமிரா இருந்ததால் தற்போது இருவரும் சிக்கிக்கொண்டனர். செயின் பறிப்பு நபர்களை போலீஸார் கைது செய்தாலும் இன்றும் அகரம் பகுதியில் தலைமை செயலக பெண் ஊழியர் சொர்ணம் என்பவரிடமிருந்து 10 பவுன் நகையை மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் பறித்துச்சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x