

சென்னை: மக்களவை தேர்தலில் பாஜக சார்பில் வட சென்னைவேட்பாளராக உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பால் கனகராஜ் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், வடசென்னை மக்களவை தொகுதி வேட்பாளர் - நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் தண்டையார்பேட்டை, திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் நேற்று முன்தினம் (23-ம் தேதி) நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு உரிய அனுமதி வாங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
ஆனால், இந்த கூட்டத்தில் 200 ஆண்கள், 50 பெண்கள் என 250 பேர் வரை கலந்து கொண்டுள்ளனர். அனுமதியின்றி கூட்டம் நடைபெறுவது குறித்து ஆர்.கே.நகர் தேர்தல் பறக்கும்படை அதிகாரி செல்வ வெங்கடேஷ், தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்படி, தேர்தல் நடத்தை விதி மீறலில் ஈடுபட்டதாக பால்கனகராஜ் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.