வாக்குச்சாவடி அலுவலர் 19 ஆயிரம் பேருக்கு முதல்கட்ட தேர்தல் பயிற்சி: மாவட்ட தேர்தல் அதிகாரி நேரில் ஆய்வு

மக்களவைத் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் நேற்று முதல் தொடங்கியது. சென்னை ஆர்.ஏ.புரம். ராணி மெய்யம்மை பெண்கள் பள்ளியில் நடைபெற்ற பயிற்சி முகாமில் பங்கேற்ற தேர்தல் அலுவலர்கள்.
மக்களவைத் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் நேற்று முதல் தொடங்கியது. சென்னை ஆர்.ஏ.புரம். ராணி மெய்யம்மை பெண்கள் பள்ளியில் நடைபெற்ற பயிற்சி முகாமில் பங்கேற்ற தேர்தல் அலுவலர்கள்.
Updated on
1 min read

சென்னை: மக்களவை தேர்தலில் வாக்குச்சாவடி அலுவலர்களாக நியமிக்கப்பட்ட 19 ஆயிரம் பேருக்கு தேர்தல் பயிற்சி நேற்று அளிக்கப்பட்டது. அதை மாவட்ட தேர்தல் அதிகாரி ஜெ.ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார்.

மக்களவை தேர்தலை முன்னிட்டு மத்திய, மாநில அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களைச் சார்ந்த அலுவலர்கள் வாக்குச்சாவடி அலுவலர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை மாவட்டத்தில் 16 சட்டப்பேரவை தொகுதிகளில் 3,726 வாக்குச்சாவடிகள் பயன்படுத்தப்பட உள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் 19,396 வாக்குச்சாவடி அலுவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

இவர்களுக்கான முதற்கட்டப் பயிற்சி வகுப்பு 16 மையங்களிலும் நேற்று நடைபெற்றது. இதில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்காளர் சரிபார்ப்பு காகிதத் தணிக்கை இயந்திரம் (VVPAT) ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து செயல்முறை விளக்கம் மூலம் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

எழும்பூர் தொகுதி, ராட்லர் தெரு, மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பை சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் ஜெ.ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு அலுவலர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.

முன்னதாக, மக்களவை தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்ட சிறப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சி சென்னை மெரினா கடற்கரை விவேகானந்தர் இல்லம் அருகில் நடைபெற்றது. இதில் மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் பங்கேற்று கொடியசைத்து பேரணியைத் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் ஷரண்யா ஹரி, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கே.ஜெ.பிரவீன் குமார், மாவட்ட வருவாய் அலுவலர் (தேர்தல்கள்) ச.சுரேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in