

காஞ்சிபுரம்: மக்களவை தேர்தல் நடத்தை விதிகளால் காஞ்சிபுரத்துக்கு வாடிக்கையாளர்கள் வருகை குறைந்துள்ளதால், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பட்டுச்சேலை விற்பனை முடங்கியுள்ளதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மக்களவை தேர்தலை ஒட்டி வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்கள் மற்றும் பணம் வழங்கப்படுவதைத் தடுப்பதற்காகத் தேர்தல் ஆணையம் பறக்கும் படைகள் மூலம் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் 84 பறக்கும் படை கண்காணிப்பு குழுவினர் பணியில் உள்ளனர். சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணிகளில் இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்துச் செல்லப்படும் பணம் மற்றும் பொருட்களுக்கு ஆவணங்கள் இல்லை என்றால், அவற்றைப் பறிமுதல் செய்கின்றனர்.
எனவே, திருமணம் மற்றும் பல்வேறு சுப நிகழ்ச்சிகளுக்காக பட்டுச் சேலை வாங்க வரும் நபர்கள் பாதிக்கப்படுவதால், பெரும்பாலானோர் தற்போது பட்டுச் சேலைகள் வாங்குவதை நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் பட்டுச்சேலை விற்பனை கடைகள் விற்பனையின்றி முடங்கியுள்ளன.
வழக்கமாக தை, மாசி, பங்குனி மற்றும் சித்திரை மாதங்களில் பட்டுச் சேலை வியாபாரம் அதிகம் நடைபெறும். பல்வேறு வெளிமாநிலங்களிலிருந்து வரும் வாடிக்கையாளர்கள் அதிக விலை கொண்ட சேலைகளையும் வாங்கிச் செல்வது வழக்கம். ஆனால், வாகனங்களில் ரொக்கமாகபணத்தை கொண்டு வந்தால் தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்வார்கள் என்பதால்,பட்டுச்சேலை வாங்குவதற்காக வரும் நபர்களின் வருகையும் குறைந்துள்ளது.
இதனால், கோடிக்கணக்கான மதிப்பிலான வியாபாரம் முடங்கியுள்ளதாக பட்டுச்சேலை விற்பனையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.