பாஜக மீண்டும் ஆட்சி பொறுப்பேற்றதும் கோடநாடு வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை: கருப்பு முருகானந்தம் உறுதி

பாஜக மீண்டும் ஆட்சி பொறுப்பேற்றதும் கோடநாடு வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை: கருப்பு முருகானந்தம் உறுதி
Updated on
1 min read

தஞ்சாவூர்: மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிப்பொறுப்பேற்றதும், கோடநாடு கொலை வழக்கில் சிபிஐ விசாரணை நடத்தி, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவோம் என தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தம் தெரிவித்தார்.

தஞ்சை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சட்டப்பேரவைத் தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அமமுக சார்பில் மன்னார்குடியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. கூட்டத்தில் தஞ்சை தொகுதி பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தம் பேசியதாவது:

மக்களவைத் தேர்தலில், அதிமுக மற்றும் அதிமுகவில் இருந்து பிரிந்துசென்ற அணிகளையும் சேர்த்து மிகப்பெரிய கூட்டணிஅமைக்க முயற்சி எடுத்தோம். ஆனால், கோடநாடு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு தொடர்பு உள்ளதற்கான ஆதாரங்களை வைத்து மிரட்டி, கூட்டணி அமையவிடாமல் திமுக தடுத்துவிட்டது.

இதேபோல, கடந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் உள்துறை அமைச்சர் அமித்ஷா அதிமுக அணிகளை ஒருங்கிணைத்து பெரிய கூட்டணி அமைக்க முயற்சி எடுத்தார். அப்போதும் பழனிசாமி ஒப்புக்கொள்ளவில்லை.

இந்த மக்களவைத் தேர்தலில் பாஜக மாபெரும் வெற்றி பெற்று, 3-வது முறையாக பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி அமைக்கும். அதன்பிறகு கோடநாடு வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி, குற்றவாளிகளுக்கு கண்டிப்பாக தண்டனை பெற்றுத்தருவோம். தமிழகத்துக்கு சிறந்த திட்டங்களையும் கொண்டு வருவோம். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில், பாஜக மாவட்டத் தலைவர் பாஸ்கர், பொதுச் செயலாளர் வி.கே.செல்வம், அமமுக நகரச் செயலாளர் ஆனந்தராஜ், ஒன்றியச் செயலாளர் ரங்கராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in