

திண்டுக்கல்: என்னை வெற்றி பெறச் செய்தால், நாட்டிலேயே முன் மாதிரி தொகுதியாக திண்டுக்கல் தொகுதியை மாற்றுவேன் என எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர் முகமது முபாரக் தெரிவித்தார்.
திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கான அதிமுக கூட்டணி கட்சிகளின் தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் நத்தம் ஆர்.விசுவநாதன் தேர்தல் அலுவலகத்தை திறந்துவைத்தார்.
எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர் முகமது முபாரக் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும். திண்டுக்கல்லில் கடந்த முறை வெற்றி பெற்ற திமுக எம்.பி. மக்களுக்கு எதையும் செய்யவில்லை. ஆன்மிக நகரமான பழநியில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயத்தை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை கொண்டு வருவேன்.
விவசாயப் பொருட்களை சேமிப்பதற்கான கிட்டங்கி அமைக்க முயற்சிப்பேன். என்னை வெற்றிபெறச் செய்தால், நாட்டிலேயே முன் மாதிரி தொகுதியாக திண்டுக்கல் தொகுதியை மாற்றுவேன் என்று கூறினார். முன்னாள் மேயர் வி.மருதராஜ், அதிமுக ஒன்றியச் செயலாளர் ராஜசேகரன், பகுதிச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.