Published : 25 Mar 2024 04:00 AM
Last Updated : 25 Mar 2024 04:00 AM
தேனி: கடந்த மக்களவைத் தேர்தலில் தேனி மக்களவைத் தொகுதியில் மட்டும் திமுக கூட்டணி வெற்றி பெறவில்லை. அந்தத் தவறுக்கு இந்த தேர்தலில் நீங்கள் ஈடுகட்ட வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி பிரச்சாரத்தின் போது பேசினார்.
தேனி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் தங்க.தமிழ்ச் செல்வனுக்கு ஆதரவாக, அமைச்சர் உதயநிதி நேற்று தேனி மாவட்டத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தேனி பங்களாமேடு, பெரியகுளம் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் அவர் பேசியதாவது: திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர், எதிர் வேட்பாளர்கள் யார் என்பதைப் பார்க்காமல் உத்வேகத்துடன் பணியாற்ற வேண்டும். பெண்களின் முடிவே தேர்தல் முடிவைத் தீர்மானிக்கிறது.
பெண்களுக்காக உரிமைத் தொகை, இலவசப் பேருந்து திட்டம், புதுமைப் பெண் உள்ளிட்ட ஏராளமான திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தி வருகிறது. இதைப் பெண்கள் உணர்ந்து திமுகவுக்கு அமோக ஆதரவை அளிக்க வேண்டும். பிரதமர் மோடி தமிழகம் வரும் போது திருக்குறளைச் சொல்வதுடன், தமிழில் சில வார்த்தைகள் பேசி, தமிழ் மீது பற்றுள்ளவர் போலும் காட்டிக் கொள்கிறார். பாஜக ஆட்சியில் தமிழகத்தில் மொழி, நிதி உரிமை அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
புதிய கல்விக் கொள்கை மூலம் தமிழக குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படும் நிலை உள்ளது. குலக் கல்வி மூலம் தந்தையின் தொழிலையே செய்ய வேண்டிய நிலையை மோடி உருவாக்கி உள்ளார். இண்டியா கூட்டணி வெற்றி பெற்றால், பெட்ரோல் ரூ.75-க்கும், டீசல் ரூ.65-க்கும் கிடைக்கும். சுங்கச் சாவடிகள் அனைத்தும் அகற்றப்படும். கடந்த மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் தேனி தொகுதியில் மட்டும் திமுக கூட்டணி வெற்றி பெறவில்லை.
அந்தத் தவறை தற்போது நீங்கள் ஈடுகட்ட வேண்டும். இதற்காக 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தங்க.தமிழ்ச் செல்வனை வெற்றி பெறச் செய்ய வேண்டும். அவ்வாறு செய்து விட்டால் தேனி தொகுதியில் மாதத்துக்கு 2 முறை தங்கி உங்களை சந்திப்பதுடன், வளர்ச்சிப் பணிகளையும் துரிதப்படுத்துவேன். இவ்வாறு அவர் பேசினார். அமைச்சர் ஐ.பெரியசாமி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் என்.ராம கிருஷ்ணன், மகாராஜன், சரவணக்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT