

திருநெல்வேலி: இண்டியா கூட்டணியில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி 9 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடுகிறது. திருநெல்வேலி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. நேற்று முன்தினம் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திருநெல்வேலி, மயிலாடுதுறை தொகுதிகள் தவிர மற்ற 7 தொகுதிகளுக்கு மட்டும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ், முன்னாள் எம்பி ராமசுப்பு, நாங்குநேரி எம்எல்ஏ ரூபி மனோகரன், அவரது மகன் அசோக், கிழக்கு மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் பால்ராஜ், காங்கிரஸ் அறக்கட்டளை செயலாளர் ராஜேஷ், கன்னியா குமரி மாவட்டத் தலைவர் ராபர்ட் புரூஸ் உள்ளிட்டோர் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், நாங்கு நேரியைச் சேர்ந்த ஒருவர் வேட்பாளராக அறிவிக்கப் படக்கூடும் என தகவல் பரவியதால் காங்கிரஸ் கட்சியினரிடையே பரபரப்பு ஏற்பட்டது.
அவரை வேட்பாளராக அறிவிக்கக் கூடாது என்று வலியுறுத்தி அக்கட்சியைச் சேர்ந்த ஒரு தரப்பினர் திருநெல்வேலி மாநகர காங்கிரஸ் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 2019-ம் ஆண்டு நாங்குநேரியில் ராகுல் காந்திக்கு வரவேற்பு அளிக்க சட்டப்பேரவை உறுப்பினர் ரூபி மனோகரன் சார்பில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் மற்றும் கொடிகளை கிழித்து அகற்றி தகராறு செய்தவர் என்றும், அவர் பாஜக பிரமுகரின் பங்குதாரராக இருப்பதாகவும் குற்றம் சுமத்தி இந்த ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், வரவேற்பு பேனர் கிழிக்கப்பட்டபோது எடுத்த புகைப் படங்களை கையில் பிடித்தவாறு எதிர்ப்பு தெரிவித்தனர். காங்கிரஸ் கட்சியின் மனித உரிமைப் பிரிவு மாநில துணைத் தலைவர் விவேக், பொதுச் செயலர் குளோரிந்தா, மண்டல தலைவர் பி.வி.டி.ராஜேந்திரன், வட்டார தலைவர்கள் நாங்குநேரி வாகை துரை, நளன், கணேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட வர்கள் கூறும்போது, “காங்கிரஸ் கட்சிக்காக தொடர்ந்து உழைத்தவர்களை வேட்பாளர் களாக நியமித்தால் வெற்றி பெறவைத்து விடுவோம். இப்போது நாங்குநேரி பிரமுகர் பெயர் பரிசீலனையில் உள்ளதாக தகவல் பரவி வருகிறது. அவருக்கு இந்தத் தேர்தலில் வாய்ப் பளிக்கக் கூடாது. அதையும் மீறி வாய்ப்பளித்தால் நாங்கள் தேர்தல் பணி செய்யமாட்டோம். காங்கிரஸ் திருநெல்வேலி தொகுதியில் தோல்வியைத் தழுவும்” என்றனர்.