

தருமபுரி: வாக்களிக்கச் செல்லும் ஆபத்தான பாதையை தற்காலிகமாக சீரமைத்துத் தருமாறு தருமபுரி மாவட்டம் அலகட்டு மலைக் கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் ஒன்றியம் வட்டுவன அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட மலைக் கிராமம் அலக்கட்டு. 50 குடியிருப்புகள் கொண்ட இந்த கிராமத்தில் சுமார் 120 பேர் வசிக்கின்றனர். இந்த கிராமத்துக்கு பாலக்கோடு ஒன்றியத்தில் சீங்காடு மலையடிவாரம் வரை மட்டுமே வாகனங்களில் பயணிக்க முடியும். அதன் பின்னர் சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் நடந்து மட்டுமே அலகட்டு கிராமத்துக்கு செல்லும் நிலை இருந்து வந்தது.
இந்நிலையில், அண்மையில் மாவட்ட நிர்வாகத்தின் முயற்சியால் டிராக்டர் செல்லும் வகையில் அலகட்டு மலைக்கான மண் பாதை சற்றே மேம்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல, அடுத்தடுத்த மலை முகடுகளில் அமைந்துள்ள ஏரிமலை, கோட்டூர் மலைகளுக்கும் அண்மையில் இவ்வாறு டிராக்டர்கள் மட்டும் செல்லும் வகையில் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
கோட்டூர் மலையில் வசிக்கும் சுமார் 300 வாக்காளர்கள் வாக்களிக்கும் வகையில் அங்குள்ள அரசுப் பள்ளியில் வாக்குச் சாவடி மையம் உள்ளது. அதேபோல, அருகிலுள்ள மற்றொரு மலை மீது அமைந்துள்ள ஏரிமலையில் அமைந்துள்ள அரசுப் பள்ளியில் சுமார் 350 வாக்காளர்கள் வாக்களிக்கும் வகையில் வாக்குச் சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
அலகட்டு மலையில் அரசு தொடக்கப் பள்ளி இருந்தபோதும் நடைமுறை சிரமங்களை கருத்தில் கொண்டு அங்கே வாக்குச் சாவடி மையம் அமைக்கப்படவில்லை. மாறாக, அலகட்டு கிராம மக்கள் பல தேர்தல்களாக ஏரிமலையில் அமைந்துள்ள வாக்குச் சாவடி மையத்துக்கு சென்றே தங்கள் வாக்குகளை செலுத்துகின்றனர்.
அலகட்டு கிராம மக்கள் ஏரிமலைக்கு செல்ல 2 வழித்தடங்கள் உள்ளன. அலகட்டு மலையிலிருந்து சீங்காடு வரை நடந்து சென்று அங்கிருந்து தரைத்தளத்தில் சில கிலோ மீட்டர் பயணித்து மீண்டும் சுமார் 4.5 கிலோ மீட்டர் தூரம் பயணித்து ஏரிமலைக்கு செல்லலாம். மற்றொன்று, அலகட்டு மலையிலிருந்து வனப்பகுதி வழியாக பள்ளத்தாக்கில் இறங்கியும், மேடுகளில் ஏறியும் சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் நடந்தும் ஏரிமலைக்கு செல்லலாம். இந்த ஒற்றையடிப்பாதை வழியாகத்தான் அலகட்டு மக்கள் வாக்களிக்க ஏரிமலைக்கு சென்று வருகின்றனர்.
ஆனால், இந்த பாதை மிகவும் சவால் நிறைந்ததாகவும், கரடு, முரடானதாகவும் உள்ளது. மேலும், கோடை காலம் என்பதால் வன விலங்குகள் நடமாட்டமும் அதிக அளவில் உள்ளது. வாக்களிக்க செல்லும்போது, குழந்தைகளையும், முதியவர்களையும் இந்த சவாலான பாதையில் தான் தூக்கிச் செல்ல வேண்டும்.
எனவே, வாக்களிக்க சிரமமின்றி சென்று திரும்பும் வகையில் இந்தப் பாதையை மாவட்ட நிர்வாகம் தற்காலிகமாக சீரமைத்துத் தர வேண்டுமென அலகட்டு கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து, பென்னாகரம் சட்டப் பேரவை தொகுதிக்கான உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சுகுமாரிடம் கேட்டபோது, ‘அலகட்டு கிராம மக்களின் கோரிக்கை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு, மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதல் படி சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்றார்