Published : 24 Mar 2024 02:01 PM
Last Updated : 24 Mar 2024 02:01 PM

நாம் செய்திருப்பது தியாகம் அல்ல; வியூகம் - மநீம நிர்வாகிகள் கூட்டத்தில் கமல் பேச்சு

மநீம தேர்தல் பிரச்சார வழிகாட்டுதல் கூட்டத்தில் கட்சித் தலைவர் கமல் உரையாற்றினார்

சென்னை: "நான் எனது எதிரி யார் என்பதை முடிவு செய்துவிட்டேன். என் நினைவு தெரிந்ததில் இருந்து நினைவு போகும் வரை எனது அரசியல் எதிரி சாதியம்தான். இந்த தேர்தல் இந்தியாவுக்கானது. தமிழகத்துக்கான களம் 2026-ல் அமையப் போகிறது. மக்கள் நீதி மய்யத்தின் தற்போதைய அரசியல் நிலைப்பாட்டை தியாகம் என்பதைவிட வியூகம் என்று புரிந்துகொள்ள வேண்டும்" என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அக்கட்சியின் கூட்டத்தில் பேசியுள்ளார்.

மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் பிரச்சார வழிகாட்டுதல் கூட்டம் சென்னை தி.நகரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்று கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பேசியதாவது: "சந்தர்ப்பவாதம் என்பது ஒரு வாதமே இல்லை என்பதுதான் என்னுடைய கருத்து. சந்தர்ப்பம் என ஒன்று இருக்கலாம். வாதம் என்பது தனியாக இருக்க வேண்டும். நமது வாதத்தை சந்தர்ப்பத்துக்கு ஏற்றது போல் எல்லாம் மாற்ற முடியாது.

அப்படி என்றால், ரிமோட்டை எடுத்து டிவியில் அடித்தீர்களே? நீங்கள்தானே இப்போது அங்கு செல்கிறீர்கள் என்று கூறுகின்றனர். ரிமோட் இன்னும் என் கையில்தான் உள்ளது. டிவியும் இன்னும் அங்கேதான் இருக்கிறது. ஏனெனில், நம்ம வீட்டு டிவி, நம்ம வீட்டு ரிமோட். ஆனால், அந்த டிவிக்கான கரண்டையும், ரிமோட்டுக்கான பேட்டரியையும் மத்தியில் உருவாக்கும் ஒரு சக்தி உருவாகிக்கொண்டிருக்கிறது. எனவே, ரிமோட்டை இனிமேல் நான் எறிந்தால் என்ன? வைத்திருந்தால் என்ன? அதுபோன்ற செய்கைகளுக்கு இனிமேல் அர்த்தமே இல்லாமல் போய்விடும்.

நான் ஒரு தனிப்பட்ட மனிதரை என்றுமே தாக்கியது இல்லை. மோடி என்பவர் மரியாதைக்குரிய பாரத பிரதமர். அவர் இன்று இந்த அரங்கத்துக்குள் வந்தால், அவருக்கு கொடுக்கப்பட வேண்டிய மரியாதைகளை எல்லாம் நான் கொடுப்பேன். அதுக்காக என்ன இவர், இப்படி அவருக்கு எதிராக பேசிவிட்டு அவர் வரும்போது மரியாதை செலுத்துகிறாரா? என்றால், மக்களுக்காக அவருக்கு தலைவணங்குவேனே தவற, எனது தன்மானத்தைவிட்டு தலை வணங்க மாட்டேன்.

சாதியம் பேசாதே என்று சொல்லி சொல்லி வளர்க்கப்பட்டவர்கள்தான் இன்று வெள்ளை தாடியுடன் இங்கே அமர்ந்துள்ளனர். அவர்களுக்கு மறுபடியும் சாதியை கற்றுக்கொடுக்கும் ஒரு மாபெரும் திட்டத்தை வகுத்துக் கொண்டிருக்கும் ஒரு கட்சியோ, ஒரு திட்டமோ எத்தனை பெரியதாக இருந்தாலும், அதை தகர்க்க வேண்டியது என் கடமை. அரசியல் களத்தில், எதிரி யார் என்பதை முடிவு செய்த பிறகுதான் வெற்றி நிச்சயம். நீங்கள் அப்படி எதுவும் இல்லாமல் மய்யம் என்று கூறுகிறீர்களே, இது எப்படி சரியாக வரும் என்று என்னிடம் கேட்கின்றனர்.

நான் எனது எதிரி யார் என்பதை முடிவு செய்துவிட்டேன். என் நினைவு தெரிந்ததில் இருந்து நினைவு போகும் வரை எனது அரசியல் எதிரி சாதியம்தான். இந்த தேர்தல் இந்தியாவுக்கானது. தமிழகத்துக்கான களம் 2026-ல் அமையப் போகிறது. மக்கள் நீதி மய்யத்தின் தற்போதைய அரசியல் நிலைப்பாட்டை தியாகம் என்பதைவிட வியூகம் என்று புரிந்துகொள்ள வேண்டும். காரணம், எந்தெந்த ஏரியா எனக்கு கொடுக்கப்படுமோ என்று பயந்துகொண்டவர்களுக்காக எல்லாம் நான் பிரச்சாரத்துக்குச் செல்லப்போகிறேன். இவ்வாறு கமல் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x