விருதுநகரில் களம் இறங்கினார் ‘சித்தி’ - ராதிகாவுக்கு தொகுதியில் பலம் என்ன?

ராதிகா சரத்குமார், சரத்குமார்
ராதிகா சரத்குமார், சரத்குமார்
Updated on
1 min read

திரைத்துறையில் முத்திரை பதித்து, சின்னத்திரையில் ‘சித்தி’யாக வலம் வரும் ராதிகா பாஜக வேட்பாளராக களமிறங்கியுள்ளதால் விருதுநகரில் தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்படைந்துள்ளது.

விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கு எப்போதும் ஒரு தனிச் சிறப்பு உண்டு. கடந்த 1977-ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அருப்புக் கோட்டை தொகுதியில் போட்டியிட்ட எம்.ஜி.ஆர். வெற்றி பெற்று தமிழகத்தின் முதல்வர் ஆனார். விருதுநகர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட சாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட கர்ம வீரர் காமராஜர் வெற்றிபெற்று முதல்வர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்விரு சட்டமன்றத் தொகுதிகளும் விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. காமராஜர் பிறந்த ஊர் என்பதாலேயே காங்கிரஸ் இத்தொகுதியை விட்டுக்கொடுக்காமல் தொடர்ந்து போட்டியிட்டு பல முறை வெற்றி பெற்றுள்ளது.

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் பாஜகவில் போட்டியிட மாவட்டச் செயலாளர் பாண்டு ரங்கனின் அண்ணன் ஜவஹர், பொதுச் செயலாளர் பேராசிரியர் ராம சீனிவாசன், டெல்லியில் பணியாற்றி வரும் டாக்டர் வேதா தாமோதரன் ஆகியோர் பெயர்கள் தொடக்கத்தில் அடிபட்டன. கடும் போட்டி நிலவி வந்த நிலையில் விருதுநகர் தொகுதியில் நடிகை ராதிகா களமிறக்கப்பட்டுள்ளார்.

நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் நடித்துள்ள இவர், நீண்டகாலமாக பிரபலமான தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார். ராடன் மீடியா என்ற நிறுவனத்தின் நிறுவனராகவும் இருக்கிறார். இதன் மூலம் திரைப்படங்கள் மட்டுமின்றி தொலைக்காட்சி தொடர்களையும் தயாரித்து வருகிறார்.

சின்னத்திரையில் "சித்தி" தொடர் மூலம் முத்திரை பதித்தவர். 2006 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக தனது கணவர் சரத்குமாருடன் அதிமுகவில் இணைந்தார். 2006 அக்டோபர் 18-ம் தேதி கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக அதிமுகவிலிருந்து நீக்கம் செய்யப்பட்டார்.

2021 முதல் சமத்துவ மக்கள் கட்சியின் துணை பொதுச் செயலாளராகவும் பொறுப்பு வகித்து வந்தார். தற்போது விருதுநகர் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளராக ராதிகா அறிவிக்கப்பட்டுள்ளதால் அக்கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளதோடு, தேர்தல் பிரச்சாரத்தையும் விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ளனர்.

பிரச்சார வியூகம் தொடர்பாக விருதுநகர் மக்களவைத் தொகுதி நிர்வாகிகளுக்கு நேற்று மாலை மாநில தலைமையிலிருந்து ஆன்லைன் மூலம் ஆலோசனைக் கூட்டமும் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. திரை பிரபலம் என்பதோடு, சின்னத்திரை மூலம் வீடுகள் தோறும் நன்கு அறிமுகமானவர் என்பது இவரது பலமாக கருதப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in