திமுக கூட்டணிக்கு 16 விவசாய சங்க கூட்டமைப்பினர் ஆதரவு
தேர்தல் பிரச்சாரத்துக்காக தஞ்சாவூர் வந்திருந்த திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினை, காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் கே.வீ.இளங்கீரன் தலைமையில் 16 விவசாயிகள் சங்க கூட்டமைப்பினர் நேற்று சந்தித்து, திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து அதற்கான கடிதத்தை வழங்கினர்.
பின்னர் இளங்கீரன் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழக வேளாண் பல்கலைக்கழகங்களில் ஏற்கெனவே இருந்தபடி, விவசாயிகளின் குழந்தைகளுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். வைகை - குண்டாறு இணைப்பு திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். விவசாயிகளின் விளை பொருட்களுக்கு இரட்டிப்பு விலை, நதி நீர் இணைப்பு திட்டம் போன்ற எந்த வாக்குறுதியையும் மத்திய பாஜக அரசு நிறைவேற்றவில்லை.எனவே, திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிக்கிறோம் என்றார்.
இதில், தஞ்சாவூர் உழவர் மன்ற கூட்டமைப்புத் தலைவர் வெ.ஜீவக்குமார், தற்சார்பு விவசாயிகள் சங்கத் தலைவர் பொன்னையன், மதுரை மாவட்ட நஞ்சை - புஞ்சை விவசாயிகள் சங்கத் தலைவர் மணிகண்டன், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு நலச்சங்க தலைவர் ஏ.கே.சுப்பிரமணியம், தேசிய வங்கியில் கடன் பெற்றோர் நலச்சங்க நிர்வாகி பொன்னுசாமி, கல்லணைக் கால்வாய் பாதுகாப்பு விவசாயிகள் சங்கம் ரமேஷ், காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கம் தங்க.தருமராஜன்;
தமிழக விவசாயிகள் விழிப்புணர்வு சங்கம் முஜிப், இந்திய விவசாயிகள் சங்கம் தனபதி, ஐக்கிய விவசாயிகள் சங்கம் சங்கரையா, சிஃபா கரும்பு விவசாயிகள் சங்கம் ராஜேந்திரன், கடலூர் மாவட்ட உழவர் மன்ற கூட்டமைப்பு தலைவர் குஞ்சிதபாதம், ராமநாதபுரம் மாவட்ட பெண்கள் விவசாயிகள் சங்கம் ராஜலட்சுமி, கிருதுமாநதி பாசன விவசாயிகள் சங்கம் திருவேங்கடயாதவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
