

சென்னை: தமிழகத்தில் 64 சதவீதம் வாக்கு வங்கி கொண்ட ஓபிசி மக்களின் நியாயமான கோரிக்கைகளை எந்தக் கட்சியும் ஏற்காவிட்டால் வரும் மக்களவைத் தேர்தலில் நோட்டாவுக்கு வாக்களிப்போம் என ஓபிசி உரிமைக்கான கூட்ட மைப்பு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பின் தலைவரும், ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியுமான வி.ரத்தினசபாபதி சென்னையில் கூறியதாவது:
தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையில் 76 சதவீதம் பேர் ஓபிசிசமுதாய மக்கள். இதில் 64 சதவீதம்பேர் வாக்குரிமை கொண்டவர்கள். இதுவரை நாங்கள் எந்த அரசியல்கட்சியுடனும் இணைந்து பயணிக்கவில்லை. மாநில அளவிலும், அகில இந்திய அளவிலும் சாதிவாரி கணக்கெடுப்பை இந்தாண்டுக்குள் நடத்தி முடிக்க வேண்டும். இந்த கணக்கெடுப்பைக் கண்காணிக்க ஓபிசி அமைப்புகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழு அமைக்கவேண்டும்.
மத்திய அரசு பணிகளில் ஓபிசிபிரிவினருக்கு சட்டப்படி வழங்கவேண்டிய 27 சதவீத இடஒதுக்கீட்டில் தற்போது 18 சதவீதம் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. எனவே எஞ்சிய 9 சதவீத இடஒதுக்கீட்டை பேக்-லாக் பணியிடங்களாகக் கருதி வழங்க வேண்டும். ஐஐடி, ஐஐஎம், என்ஐடி, கேந்திரிய வித்யாலயா போன்ற கல்வி நிறுவனங்களில் என்எஃப்எஸ் போன்ற தடைகளைக் காரணம் காட்டி ஓபிசி இடஒதுக்கீட்டை நிராகரிப்பதை நிறுத்த வேண்டும்.
குறிப்பாக பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய சமுதாயத்துக்கு வழங்கப்படும் 10 சதவீத இடஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவைச் சேர்ந்த ஏழை மக்களையும் சேர்க்க வேண்டும். ஓபிசி வகுப்பினர் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான வருமான உச்ச வரம்பை ரூ.8 லட்சமாக உயர்த்த வேண்டும். ஏனெனில் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு வருமான உச்சவரம்பு ரூ.8 லட்சமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
சீர்மரபினர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு டிஎன்டி என ஒற்றைச் சான்றிதழ் வழங்கப்படும் என அரசாணை பிறப்பிக்க வேண்டும். விவசாயிகளின் நலன் காக்கும் வகையில் மஞ்சள் மற்றும் தேங்காய்க்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்து, ரேஷன் கடைகளில் பாமாயிலுக்குப் பதிலாகதேங்காய் எண்ணெய் விநியோகிக் கப்பட வேண்டும்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு விதமாக சாதிச்சான்றிதழ் வழங்கப்படுவதை தவிர்த்து அனைவருக்கும் எம்பிசி என சான்றிதழ் வழங்க வேண்டும்.
எங்களின் நியாயமான இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற யார் உத்தரவாதம் தருகின்றனரோ அவர்களுக்கே வாக்களிப்பது என முடிவு செய்துள்ளோம். ஒருவேளை எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற எந்த அரசியல் கட்சியும் முன்வரவில்லை என்றால் நோட்டா வுக்கு வாக்களிப்பது என முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ்நாடு வீரசைவர் பேரவை மாநிலத் தலைவர் எஸ்.நாகரத்தினம், தமிழ்நாடு யாதவர் பேரவை வேலுசாமி யாதவ், ஒக்கலிக்கர் மகாஜன சங்கத் தலைவர் ஆர்.வெள்ளியங்கிரி, முக்குலத்தோர் அமைப்புகளின் நிர்வாகிகள் சிவா,மணிவேல் உள்பட அனைத்து சமுதாய நிர்வாகிகளும் உடனிருந்தனர்.