Published : 24 Mar 2024 06:30 AM
Last Updated : 24 Mar 2024 06:30 AM
புதுக்கோட்டை: லஞ்ச ஒழிப்புப் போலீஸாரால் கைப்பற்றப்பட்டு, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் சொத்து ஆவண நகல்களை வழங்குமாறு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் மனு தாக்கல் செய்துள்ளனர்.
கடந்த அதிமுக ஆட்சியில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தவர் சி.விஜயபாஸ்கர். அப்போது, வருமானத்தைவிட 54 சதவீதம் கூடுதலாக சொத்து சேர்த்ததாக விஜயபாஸ்கர் மற்றும்அவரது மனைவி ரம்யா மீது புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கின் அடிப்படையில்2021-ல் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு உட்பட 56 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் சோதனை நடத்தினர். அதில், ரூ.23.85 லட்சம் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 3.75 கிலோ வெள்ளிப் பொருட்கள், 136 கனரக வாகனப் பதிவு ஆவணங்கள்,19 ஹார்ட் டிஸ்க்குகள் உள்ளிட்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
பின்னர், இந்த வழக்கில் 216 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகையை புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புபோலீஸார் தாக்கல் செய்தனர். அப்போது, சொத்து ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டன. தற்போது வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், லஞ்ச ஒழிப்பு போலீஸாரால் கைப்பற்றப்பட்டு, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சொத்து ஆவண நகல்களையும், குற்றப்பத்திரிக்கை நகலையும் தங்களுக்கு வழங்குமாறு அமலாக்கத் துறை அதிகாரிகள், புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் அண்மையில் மனு தாக்கல் செய்தனர்.
வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது, அமலாக்கத் துறையின் மனு குறித்தும் நீதிபதி விசாரணை மேற்கொண்டார். அப்போது, அமலாக்கத் துறை மனு குறித்தும், இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரி விஜயபாஸ்கர், மனைவி ரம்யா ஆகியோர் தாக்கல் செய்த மனு குறித்தும் பதில் அளிக்குமாறு போலீஸாருக்கு உத்தரவிட்ட நீதிபதி, அடுத்த விசாரணையை ஏப்.25-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
அன்று லஞ்ச ஒழிப்பு போலீஸாரால் தெரிவிக்கப்படும் பதிலின் அடிப்படையில் அமலாக்கத் துறைக்கு ஆவண நகல் வழங்குவது குறித்து அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும் என்று கூறப்படுகிறது. விஜயபாஸ்கரின் வீட்டில் இரு தினங்களுக்கு முன்புஅமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்ட நிலையில், தற்போது சொத்து ஆவண நகலை அத்துறையினர் கேட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT