

திருவாரூர்: அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை அழிக்க பாஜக முயற்சிப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
தஞ்சாவூர் தொகுதி திமுக வேட்பாளர் ச.முரசொலி, நாகை தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் வை.செல்வராஜ் ஆகியோரை ஆதரித்து, திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் நேற்று மாலை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, தேர்தல் அறிக்கை என்ற பெயரில் பம்மாத்து அறிக்கையை வெளியிட்டுள்ளார். ஆளுநரை நியமிக்கும்போது மாநில அரசிடம் ஆலோசனை பெற்று நியமிக்க வேண்டும் என்னும் திமுக தேர்தல் அறிக்கையின் நகலை அவர் வெளியிட்டுள்ளார்.
திமுக அரசுக்கு குடைச்சல் கொடுக்கும் ஆளுநரை எப்போதும்அவர் கண்டித்தது கிடையாது. ஆனால், அதிமுக ஆட்சியின்போது ஆளுநர் ஆய்வுப் பணியில் ஈடுபட்டதைக் கண்டித்து நாங்கள் போராட்டம் நடத்தினோம். தற்போதும் உச்ச நீதிமன்றம் வரை சென்று ஆளுநரைக் கண்டித்துப் போராடி வருகிறோம்.
அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை அழிக்க பாஜக அரசு முயற்சிக்கிறது. திமுகவைப் பற்றி பல்வேறு மாநிலங்களில் விமர்சனம் செய்த பிரதமர் மோடி, தற்போது தமிழகத்துக்கே வந்து விமர்சனம் செய்யத் தொடங்கியுள்ளார். திமுகவைப் பொறுத்தவரை ஏச்சு, ஏளனம், வசவுகளை உரமாக்கிக் கொள்வோம்.
ஆளுநர் பதவி விலகுவாரா?- அமைச்சர் பொன்முடி பதவி பிரமாணம் விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உச்ச நீதிமன்றம் கடுமையான வார்த்தைகளால் எச்சரிக்கை கொடுத்துள்ளது. இதுவரை எந்த ஆளுநரும் உச்சநீதிமன்றத்தால், இந்த அளவுக்கு கண்டனத்துக்கு உள்ளாகி இருப்பாரா என்பது சந்தேகம்தான். அவருக்கு வெட்கம், மானம், சூடு, சொரணை இருந்தால் பதவி விலகி இருக்க வேண்டும்.
இத்தனை நாட்கள் ஆளுநர் ஆர்.என்.ரவி திமுகவினரை விமர்சனம் செய்து, தொல்லை கொடுத்து உற்சாகப்படுத்தி வந்தார். அந்த வேலையை தற்போது பிரதமர் செய்யத் தொடங்கியுள்ளார். இதன்மூலம் திமுகவினர் மேலும் உற்சாகமாக பணியாற்றுவார்கள். தமிழக மக்களை பொறுத்தவரை அடக்க நினைப்பவர்களையும் ஏற்கமாட்டார்கள். அடிமையாக இருப்பவர்களையும் ஏற்க மாட்டார்கள். எனவே, வரும் தேர்தலில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
கூட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், அமைச்சர்கள் கேஎன்.நேரு, அன்பில் மகேஸ், டிஆர்பி.ராஜா, ரகுபதி, தஞ்சை எம்பி எஸ்எஸ்.பழநிமாணிக்கம் மற்றும் திமுக நிர்வாகிகள், கூட்டணிக் கட்சியினர் பங்கேற்றனர்.