Published : 24 Feb 2018 07:19 am

Updated : 24 Feb 2018 07:19 am

 

Published : 24 Feb 2018 07:19 AM
Last Updated : 24 Feb 2018 07:19 AM

மறைந்த செவ்விசை மேதை எம்.டி.ராமநாதன் நினைவை போற்றும் ‘பாவயாமி ராமநாதம்’: சென்னையில் நாளை நடக்கிறது; இசைக் கலைஞர்கள் பங்கேற்பு


றைந்த செவ்விசை மேதை எம்.டி.ராமநாதனின் நினை வைப் போற்றும் வகையில் ‘பாவயாமி ராமநாதம்’ என்ற பெயரில் ஒரு விழாவை மிருதங்க வித்வான்சி.என்.பாலாஜி ஏற்பாடு செய்துள்ளார். சென்னை மயிலை நாகேஸ்வர ராவ் பூங்கா அருகில் உள்ள ராக சுதா அரங்கில் நாளை (25-ம் தேதி) காலை 10 மணி முதல் இந்த விழா நடைபெற உள்ளது.

எம்.டி.ராமநாதனின் இசைக் கச்சேரிகளில் இருந்து சில பகுதிகள் ரசிகர்களுக்காக இந்த விழாவில் ஒலிபரப்பப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து, அவருக்கு பல செவ்விசை நிகழ்ச்சிகளில் வயலின் இசைத்த வித்வான் டி.என்.கிருஷ்ணன் மற்றும் மிருதங்கம் வாசித்த வித்வான் குருவாயூர் துரை இருவரும், எம்.டி.ராமநாதனுடன் ஏற்பட்ட அனுபவங்களை ரசிகர்களோடு பகிர்ந்து கொள்கின்றனர். நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம்.

கேரள மாநிலம் பாலக்காட்டில் 1923-ம் ஆண்டு மே 23-ம் தேதி பிறந்த எம்.டி.ராமநாதன், புவியியலில் பட்டம் பெற்ற பிறகு, சென்னைக்கு குடிபெயர்ந்தார். பாலக்காட்டில் வசிக்கும்போதே தேவேச பாகவதரிடம் செவ்விசையில் அடிப்படைகளை நன்கு பயின்றதன் விளைவாக, சென்னை அடையாறு கலாக்ஷேத்ரா கலைக்கூடத்தில் டைகர் வரதாச்சாரியின் மாணவனாக, தன் இசை அறிவை மேலும் வளர்த்துக்கொள்ளச் சேர்ந்தார். காலப்போக்கில் டைகரின் பிர தான சீடர் என்ற பெயரையும் பெற்றார். நிறுவனர் ருக்மணி தேவி அருண்டேலின் பாராட்டை யும் பெற்றார். அதுவே அவருக்கு அங்கு இசை ஆசிரியர் வேலையையும் பெற்றுத் தந்தது.

அதே சமயம், செவ்விசையில் தனக்கென்று ஒரு பாணியை அமைத்துக் கொண்டார் என்று சொல்வதைவிட, அந்த பாணி தானாகவே அமைந்தது என்று தான் சொல்லவேண்டும்.

நான் அவரது இசையை பல மேடைகளில் நேரில் அனுபவித்திருக்கிறேன். முக்கால் கட்டையை அடிப்படை ஸ்ருதியாகக் கொண்டு அவர் பாடுவதைக் கேட் பது அலாதியான அனுபவம். அவசர கதி என்பதே துளியும் இல்லாத அவரது பாட்டுக்கு ஒரு ரசிகப் பட்டாளமே உண்டு.

அவரது பாடல்கள் கொண்ட இசைத்தட்டை அகில இந்திய வானொலி நிலையம் அடிக்கடி ஒலிபரப்பும். அதில், ‘பரிபாலய பரிபாலய’ என்ற பாடலை ரீதிகெளளை ராகத்தில் மிகவும் அழகாகப் பாடியிருப்பார். அதைக் கேட்டே அவரது இசையின்பால் ஈர்க்கப்பட்டேன். கச்சேரியின் நடுவில், தன் பக்கவாத்தியக் கலைஞர்களுடன் நகைச்சுவையாகப் பேசுவார். சில சமயம் ரசிகர்களுடனும் அது நடக்கும்.

அவரது ஆங்கிலப் புலமை யைச் சொல்லவே வேண்டாம். அவ்வளவு நேர்த்தியாக இருக்கும். ஆனால், எல்லாவற்றுக்கும் மேலாக, சங்கீதத்தின்பால் அவர் கொண்ட பக்தி விவரிக்க இயலாதது. அதனால்தானோ, என்னவோ, அவரது நிகழ்ச்சிகள் அனைத்துமே ரசிகர்களை தியான நிலைக்கு கொண்டு போய்விடும்.

செவ்விசை மேதை எம்.டி.ராமநாதன் 60-வது வயதில் மாரடைப்பால் காலமானார். அவரது மறைவு, செவ்விசை உலகுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவர் தனது கச்சேரியின் இறுதியில், எங்கள் நண்பர்கள் குழு கேட்டுக்கொண்டதற்கு இணங்க, ‘வருகலாமோ அய்யா நான் அங்கே’ என்ற நந்தனார் சரித்திரப் பாடலை தவறாமல் பலமுறை பாடியதை நாங்கள் இன்றளவும் நினைவில் வைத்துள்ளோம்.


Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x