

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் 2 இடங்களில் தேர்தல் பறக்கும் படை நடத்திய சோதனையில், மலேசிய நாட்டுபணம் ரூ.58,212 உட்பட ரூ.1 லட்சத்து 67 ஆயிரத்து 212 மற்றும் 15 பாஸ்போர்ட்டுகள் கைப்பற்றப்பட்டன.
மக்களவை தேர்தலை முன்னிட்டு, ஆவடி சட்டப்பேரவைத் தொகுதியைச் சேர்ந்த தேர்தல் பறக்கும் படை குழு அம்பத்தூர், சோழம்பேடு சாலையில் நேற்று அதிகாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டது. அப்போது, அவ்வழியாக வந்தஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டதில், காரில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.58,212 மதிப்புள்ள மலேசியா நாட்டு பணம் மற்றும் இந்திய பணம் ரூ.9 ஆயிரம் எடுத்து வரப்பட்டது கண்டு பிடிக்கப் பட்டது. அத்துடன், காரில் மலேசிய நாட்டு 15 பாஸ்போர்ட்டுகள், 2 இந்திய பாஸ்போர்ட்டுகள் இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து, அவற்றை பறிமுதல் செய்தஅதிகாரிகள் ஆவடி தாசில்தார் விஜய குமாரிடம் ஒப்படைத்தனர். மேலும், பாஸ்போர்ட் தொடர்பாக அம்பத்தூர் போலீஸார் காரை ஓட்டி வந்த திருமுல்லைவாயிலை சேர்ந்த ஜின்ஷோ என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல், திருவள்ளூர் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட தேர்தல் பறக்கும் படை குழு திருவாலங்காட்டை அடுத்த சின்னம்மாபேட்டை கிராமத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டது.
அப்போது, அவ்வழியாக வந்த காரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.1 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. திருவள்ளூர் சார்நிலைக் கருவூலத்தில் பணம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து, காரை ஓட்டி வந்த சதீஷ் என்பவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.