

தஞ்சாவூர்: தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் இண்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்வது என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் முடிவு செய்துள்ளது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலக் குழுக் கூட்டம் தஞ்சாவூரில் நேற்று நடைபெற்றது. இதில், சங்கத்தின் அகில இந்திய இணைச் செயலாளர் டி.ரவீந்திரன், மாநில பொதுச் செயலாளர் சாமி.நடராஜன், பொருளாளர் சி.கே.பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன் வரவேற்றார். மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார் நன்றி கூறினார்.
இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மாநிலத் தலைவர் பெ.சண்முகம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய ஆட்சி அதிகாரத்தில் 10 ஆண்டுகளாக உள்ள பாஜக தலைமையிலான அரசு, தேர்தல் காலத்தில் விவசாயிகளுக்கும், மக்களுக்கும் அளித்த வாக்குறுதி களை இதுவரை நிறைவேற்றாமல் வஞ்சித்து வருகிறது. விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளை பொருட்களுக்கு எம்.எஸ்.சுவாமி நாதன் குழு பரிந்துரை அடிப்படையில் குறைந்தபட்ச ஆதார விலையை வழங்குவோம் என்ற மத்திய அரசு இதுவரை வழங்கவில்லை.
இந்திய விளைநிலங்களையும், விவசாயிகளையும் கார்ப்பரேட் நிறுவனங்களின் கொத்தடிமைகளாக மாற்றக்கூடிய 3 வேளாண் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. மேலும், உரம் உள்ளிட்ட வேளாண் இடுபொருட்கள், அரிசி உள்ளிட்ட வேளாண் விளைபொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
எனவே, தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் இண்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாகன பிரச்சாரம், விவசாயிகளின் வீடுகளுக்குச் சென்று துண்டறிக்கைகளை வழங்குவது, அரங்க கூட்டம் நடத்துவது போன்ற களப்பணி மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.