Published : 12 Feb 2018 09:05 AM
Last Updated : 12 Feb 2018 09:05 AM

சர்வதேச தரத்தில் ஐசிஎப்-ல் உருவாக்கப்படும் ‘ரயில் - 2018’: தயாரிப்புப் பணி அடுத்த வாரம் தொடக்கம்

சர்வதேச தரத்தில் உருவாக்கப்படும் ‘ரயில் - 2018’ தயாரிப்புப் பணி அடுத்த வாரம் தொடங்குகிறது. இந்த ரயில் தயாரிப்புப் பணி ஜூனில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் ரயில்களின் தேவை அதிகரித்து வருவதால், மத்திய ரயில்வே துறை, தனியார் பங்களிப்புடன் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, பாதுகாப்புடன் விரைவான பயணத்தை மேற்கொள்ள பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. நம் நாட்டில் முக்கிய நகரங்களில் மணிக்கு அதிகபட்சமாக 160 கி.மீ. வேகத்தில் ரயில்களை இயக்கும் வகையில், அதற்கு ஏற்ற நவீன ரயில் பெட்டிகள் தயாரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

அதற்கு ஏற்றார்போல், சர்வதேச தரத்துடன் ‘ரயில் - 2018’ என்ற பெயரில் தயாரிக்கப்படவுள்ளது. இதற்கான, புதிய தொழில்நுட்ப வசதியுடன் பெட்டிகள் வடிவமைப்பு வரைபடங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த அதிவிரைவு ரயில், சென்னை பெரம்பூரில் உள்ள ஐசிஎப் தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகிறது.

சர்வதேசத் தரம்

இது தொடர்பாக ஐசிஎப் அதிகாரிகள் ‘தி இந்து’விடம் கூறும்போது, ‘‘அதிகபட்சமாக மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் செல்லும் வகையில் புதிய தொழில்நுட்ப வசதியுடன் பெட்டிகளைத் தயாரிக்க ஐசிஎப்-க்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள வரைபடங்கள் குறித்த இறுதிகட்ட பணிகளும் நிறைவடைந்துள்ளன. சர்வதேச அளவில் தரமும், பயணிகள் வசதியும் இருக்கும்.

குறிப்பாக, வைஃபை வசதி, திரைகள் மூலம் ரயில் நிலையம் குறித்த தகவல்கள், பயோ கழிவறை, பெட்டிகளில் ஏசி வசதி, ரயிலின் மற்ற பெட்டிகளுக்கு பயணிகள் எளிமையாக செல்லும் வசதி, எல்இடி விளக்குகள் உள்ளிட்ட வசதிகள் இதில் இடம்பெறும்.

ரயில்கள் வேகமாகச் சென்றாலும் அதிர்வுகள் குறைந்து பயணிகள் சொகுசாக பயணத்தை மேற்கொள்ள முடியும். இந்த அதிநவீன ரயில் பெட்டிகள் தயாரிப்புப் பணி அடுத்த வாரத்தில் தொடங்கவுள்ளது. வரும் ஜூன் மாதம் இறுதிக்குள் முதல் ரயில் தயாரிக்கப்படும். எந்த வழித்தடத்தில், எப்போது இயக்கப்படும் என்பது குறித்து இந்திய ரயில்வே வாரியம்தான் முடிவு செய்யும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x