கண்ணீர், ஆக்‌ஷன் பேச்சுகள்... தேர்தலில் மகனுக்காக பம்பரமாக சுழலும் துரைமுருகன்!

படங்கள்: வி.எம்.மணிநாதன்
படங்கள்: வி.எம்.மணிநாதன்
Updated on
2 min read

வேலூர்: வேலூர் மக்களவைத் தேர்தலில் தனது மகன் கதிர் ஆனந்துக்காக அமைச்சர் துரைமுருகன், தனது 85-வது வயதிலும் பம்பரமாக சுழன்று தேர்தல் வேலைகளில் தீவிரம் காட்டி வருகிறார். வேட்பாளர் அறிமுக கூட்டங்களில் அவரது சென்டி மென்ட், ஆக்ஷன் பேச்சுகளால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

வேலூர் மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் தற்போதைய மக்களவை உறுப்பினர் டி.எம்.கதிர்ஆனந்த் மீண்டும் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் புதிய நீதிக்கட்சியின் நிறுவனத் தலைவர் ஏ.சி.சண்முகம், அதிமுக சார்பில் மருத்துவர் பசுபதி போட்டியிடுவதன் மூலம் மும்முனை போட்டிக்களமாக வேலூர் மக்களவைத் தொகுதி மாறியுள்ளது.

புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் கடந்த 11 மாதங்களாகவே தேர்தல் பணியின் ஆரம்ப கட்ட வேலைகளை தொடங்கி மருத்துவ முகாம்கள், வேலைவாய்ப்பு முகாம்கள், விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் என மக்களவைத் தொகுதி முழுவதும் ஒரு சுற்று பிரச் சாரத்தை முடித்ததுடன், சுமார் 3 லட்சம்பேரிடம் தொடர்பில் இருப்பதாக ஏ.சி.சண்முகம் கூறி வருகிறார்.

இரண்டாவதாக களத்தில் இறங்கிய திமுக வேட்பாளர் கதிர்ஆனந்தின் பிரச்சாரம் தற்போது ராக்கெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. திமுகவின் பிரச்சாரத்தை கதிர் ஆனந்தின் தந்தையும், திமுகவின் பொதுச்செயலாளரும், நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன் கவனித்து வருகிறார்.

திமுக பொதுச்செயலாளர் தனது அனைத்து அரசியல் வியூகங்களையும் இந்த தேர்தலில் வெளிப்படுத்தி வருகிறார் என திமுகவினர் கூறி வருகின்றனர். தனது 85-வது வயதிலும் தொகுதிகளில் தேர்தல் அலுவலகங்கள் திறப்பது, முக்கிய பிரமுகர்கள் சந்திப்பு என பம்பரமாக சுழன்று வருகிறார்.

வேலூர் தொகுதி திமுக என்ற தேரில் இருந்து தனித்தனியாக பிரிந்து ஓடிய சில குதிரைகளை மீண்டும் தேரில் பூட்டி ஓட்டும் முயற்சியில் அமைச்சர் துரைமுருகன் தீவிரம் காட்டி வருகிறார். இதற்காக, சாம, பேத, தான, தண்டம் என்ற அனைத்து படிநிலைகளையும் அவர் வெளிப்படுத்தி வருகிறார்.

வேட்பாளர் அறிமுகக் கூட்டங்களில் உணர்ச்சிப் பெருக்க கண்ணீர் பேச்சும், மேடையில் ஆவேச பேச்சுகள் மூலம் அமைச்சர் துரைமுருகன் சென்டிமென்ட், ஆக் ஷன் காட்சிகளை கட்சியினருக்கு காட்டி வருகிறார்.

குடியாத்தத்தில் நேற்று முன்தினம் காலை பேசும்போது, மிசாவில் தனது மகனை தொடக்கூட முடியாமல் தடுத்துவிட்டார்கள் என கண்கள் கலங்கியபடி பேசிய அமைச்சர் துரைமுருகனால் அந்த அரங்கமே சில நிமிடங்கள் அமைதியானது.

தொடர்ந்து, வேலூரில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பேசிய அமைச்சர் தனது மகன் கதிர் ஆனந்த் குறித்து மீண்டும் பேசிய பிறகு அதிரடி பேச்சுக்கு திடீரென மாறினார். ‘அண்ணாவின் திராவிட நாட்டை நம்பி இந்த கட்சிக்கு வந்தவன் நான்.

எனக்கு இந்த கட்சியைத் தவிர எதுவும் தெரியாது. பிரதமரே எங்கள் உணர்ச்சியை தொட்டுப் பார்க்காதீங்க. எங்கள் கட்சியை கைவேப்பன்னு சொல்லாதீங்க. ரத்தம் கொதிச்சுப் போயிடும். எனது மனைவி, மகனை விட நான் நேசிப்பது எனது கட்சி திமுகவை தான்’’ எனக் கூறி கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தினார்.

திமுகவின் தேர்தல் பிரச்சாரம் வேகமெடுத்துள்ள நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே வெறிச்சோடி காணப் பட்ட அமைச்சர் வீட்டின் முற்றம் தற்போது கட்சி பிரமுகர்களால் நிரம்பி வருகிறது.

இதுகுறித்து திமுக முன்னணி நிர்வாகிகளிடம் பேசியபோது, ‘‘வேலூர் மக்களவைத் தொகுதியில் நிலவிய கோஷ்டிகளால் தனது மகனுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா?, கிடைக்காதா? என்பதுடன் வேறு தொகுதிக்கு மாறலாமா? என்ற பேச்சும் ஒரு கட்டத்தில் இருந்தது. அதையெல்லாம் கடந்து வேலூர் தொகுதியை மீண்டும் கதிர் ஆனந்துக்கு அமைச்சர் துரைமுருகன் உறுதி செய் துள்ளார்.

அத்துடன், மூத்த அமைச்சர் நேரு, உதயநிதி ஸ்டாலின் மூலம் வேலூர் தொகுதி கோஷ்டி பூசலை மூட்டை கட்டி வைத்து தேர்தல் வேலைகளில் ஈடுபடவும் செய்துவிட்டார். கடந்த மக்களவைத் தேர்தல், கடந்த சட்டப்பேரவை தேர்தலில் தனக்கும், தனது மகனுக்கும் ஏற்பட்ட நிலை இந்த தேர்தலில் வரக்கூடாது என்பதில் அமைச்சர் உறுதியாக உள்ளார். இனி மக்கள் கைகளில்தான் அனைத்தும் இருக்கிறது’’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in