“ஜெயித்தால் என் இதயம் நின்று விடும்!” - ‘தேர்தல் மன்னன்’ பத்மராஜன் பேட்டி

“ஜெயித்தால் என் இதயம் நின்று விடும்!” - ‘தேர்தல் மன்னன்’ பத்மராஜன் பேட்டி
Updated on
1 min read

தருமபுரி: அனைத்து தேர்தலிலும் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்து வரும் நிலையில் எதிர்பாராதவிதமாக ஏதாவது ஒரு தேர்தலில் வெற்றி பெற்று விட்டால் எப்படி இருக்கும் என கேட்டதற்கு எனது இதயம் நின்று விடும் என, சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டத்தைச் சேர்ந்த ‘தேர்தல் மன்னன்’ பத்மராஜன் தெரிவித்தார்.

மக்களவைத் தேர்தலில் தருமபுரி தொகுதிக்கு முதல் வேட்பாளராக மனு தாக்கல் செய்த பத்மராஜன் `இந்து தமிழ் திசை' செய்தியாளரிடம் கூறியதாவது: 1988 முதல் 238 தேர்தல்களில் மனு தாக்கல் செய்துள்ளேன். டெபாசிட் உள்ளிட்டவற்றுக்காக பல லட்சம் இழந்திருக்கிறேன். ஆனாலும், எனக்கு ஓர் அடையாளம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

ஆரம்பத்தில் பணத்தை விரயமாக்குவதாக வீட்டிலிருப்ப வர்கள் தெரிவித்த போதிலும், சாதனைபுரிய வேண்டும் என்ற என் எண்ணத்தை உணர்ந்த பின்னர், தங்கள் மனதை மாற்றிக் கொண்டார்கள்.

முன்னாள் பிரதமர் நரசிம்மராவை எதிர்த்து வேட்புமனு தாக்கல் செய்தபோது மர்ம நபர்களால் கடத்தப்பட்டேன். இதுபோன்ற பல களேபரங்களை கடந்து வந்துள்ளேன்.

இவ்வாறு கூறிய பத்மராஜனிடம், "எதிர்பாராத விதமாக ஏதாவது ஒரு தேர்தலில் வெற்றி பெற்று விட்டால்?" என்று கேட்டபோது, "அப்படி நடந்துவிட்டால் என் குடும்பத்துக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுவிடும். ஏனெனில் நான் வெற்றிபெற்றால், ஆனந்த அதிர்ச்சியில் என் இதயம் துடிப்பதையே நிறுத்தி விடும்" என்றார் சிரித்தபடி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in